தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: இணையத்தில் துப்பாக்கி கற்ற 14 வயது சிறுவன்
பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14 வயது சிறுவன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன் வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களை அதிகமாகப் பார்த்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குறித்த சிறுவன் முதலில் வீட்டில் இருந்த தனது தாய் வழி தாத்தா, பாட்டியைச் சுட்டுக் கொன்ற பின்னர், பாடசாலைக்குச் சென்று மேலும் அறுவரைக் சுட்டுக் கொன்றுவிட்டுத் தவறான முடிவெடுத்துகொண்டான்.
ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு
பொலிஸார் தகவல்
சம்பவம் தொடர்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிராந்திய பொலிஸ் துணை ஆணையாளர் அத்தாபோல் அனுசித், அந்த சிறுவன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் துப்பாக்கிகள் மீது ஆர்வம் காட்டி வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், கடந்த வருடம் அந்த சிறுவன் பாடசாலைக்குக் கொண்டு வந்த ஏர்-கன் (BB gun) ரகத் துப்பாக்கியை ஆசிரியர் ஒருவர் பறிமுதல் செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களைத் தவிர 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்தில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக இது கருதப்படுகின்றது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்தத் தாய்லாந்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், மாணவர்களின் மனநலப் பரிசோதனை, அவசர காலப் பயிற்சிகள் மற்றும் ஆபத்தான பொருட்களைப் பாடசாலைக்குக் கொண்டுவருவதைத் தடுக்கும் சோதனைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.