பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள்
பிரான்ஸ் தமிழர்களின் ஒர் அடையாளமாகவுள்ள லா சப்பல் தமிழர் வர்த்தகர் பகுதியில், தமிழர் திருநாளாம் தைபொங்கல் பெருநாளினை, முதன்முறையாக இலங்கை இந்திய வர்த்தக சங்கம் முன்னெடுப்பதில் பெருமகிழ்வடைகின்றது.
எதிர்வரும் ஜனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பொதுப்பொங்கலிடலுடன் நிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன.
ஒவ்வொரு வர்த்தகர்களின் ஒரு பிடி அரிசியின் கூட்டுப்பொங்கலாக, தமிழர்களின் பண்பாட்டினை பல்லின மக்களுக்கும் வெளிப்படுத்தும் இத்திருநாளில் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இப்பெருநாளினை மையப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பல பரிசில்கள் வழங்கும் வகையில் நல்வாய்ப்பு சீட்டும் வர்த்தக நிலையில் வழங்கப்படுகின்றது.
தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் சங்கமம்
இயல் இசையென தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் சங்கமிக்க, பரிஸ் 10ம் வட்டார நகரசபையின் அங்கீகாரத்துடனும், வட்டார காவல்துறையின் ஒத்துழைப்புடனும் வெளியரங்க நிகழ்வாக இது அமைய இருக்கின்றது.
இது தொடர்பில் இலங்கை - இந்திய வர்த்தக சங்கம் ஜனவரி 5ம் நாள் வியாழக்கிழமை ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, இந்நிகழ்வு தொடர்பான விபரங்களை உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு அறிவித்திருந்தது.
பிரான்ஸ் வாழ் தமிழர்களின் ஓர் அடையாளமாக லா சப்பல் தமிழர் வர்த்தக மையமானது, பிரெஞ்சு ஊடகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் என பல்வேறு மட்டங்களிலும் ஓர் அங்கீகாரத்தினை பெற்றுள்ள நிலையில், இப்பகுதியில் தமிழர்களின் பண்பாட்டு பெருநாளாகிய தைத்திருநாளினை கொண்டாடுவது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைவதோடு, இதன்பால் கிடைக்கின்ற சமுக,பண்பாட்டு அங்கீகாரமானது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு புதிய கதவுகளை பிரெஞ்சு தேசத்தில் திறக்கும் என்ற நம்பிக்கையினை சங்கத்தின் தலைவர் இராசையா சிறிதரன் வெளிப்படுத்தினார்.
பிரான்ஸ் வாழ் தமிழர்களின் அடையாளம்
வர்த்தகர்களின் நிகழ்வாக மட்டுமல்லாது வாடிக்கையாளர்களையும் இணைத்த ஒர் கூட்டுநிகழ்வாக, 2 யூரோ பெறுமதியான நல்வாய்ப்பு சீட்டு வர்த்தக நிறுவனங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொருளாளர் ஏகாம்பரம் மதிவதணன் , நிகழ்வரங்கில் குலுக்கல் முறையில் அதிஷ்டம் பார்க்கப்படும் என்றார்.
கரகாரட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என தமிழர்களின் மரபுசார்ந்த கலைவடிவங்கள் நிகழ்வரங்கார அமைய இருப்பதோடு, நடனம், பாடல் , இசை என இயல் இசையோடு, தமிழர் திருநாள் தொடர்பில் பிரான்ஸ் மொழியில் காணொளி ஆவணம் ஒன்றும் வெளியிடப்படுகின்றது என உபதலைவர் வின்சன் றூபன் தெரிவித்திருந்தார்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்கின்ற கோடைகால பெருநிகழ்வாக தேர்த்திருவிழா அமைவதுபோல், எதிர்காலத்தில் தமிழர் திருநாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுக்கின்ற குளிர்கால புத்தாண்டு நிகழ்வாக இப்பகுதியில் தைத்திருநாள் அமையும் என்ற நம்பிக்கையினை முன்னாள் தலைவரும்,செயற்குழு உறுப்பினருமாகிய செல்லத்துரை சிறிபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.