பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடியேற்றி பொங்கல் கொண்டாட்டம்
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை குடும்பப் பொங்கலாக ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இந்த பொங்கல் நிகழ்வானது இன்றைய தினம் (21.01.2024) உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்றள்ளது.
தமிழீழ தேசியக்கொடி
இந்த நிகழ்வில் முதலில் முறையே தமிழீழ தேசியக்கொடி மற்றும் பிரித்தானியக் கொடி ஆகியவை ஏற்றப்பட்டன.
பின்னர் இளைஞர்களால் பறையிசை, காவடி நடனம், பட்டமேற்றல் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுடன் தைப்பொங்கல் சிறப்பு பேச்சுரைகள், கவிதைகள், பாட்டுகள் போன்றனவும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக கடந்த வருட மாவீரர் நாள் வரவு செலவு கணக்கு மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவினால் மக்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பண்பாட்டு அடையாளங்கள்
தாயகத்தில் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் திட்டமிட்டு அழிவுக்குட்படுத்தப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த வரலாற்று மரபுத் தொடர்ச்சியை பேணிப்பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது தலையாய கடமையும் அவசியமுமாகும்.
அந்த வகையில் தமிழரின் பாரம்பரிய பறையிசையின் பண்ணிசை முழங்க உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற தமிழர் திருநாளாம் பொங்கல் விழா புதுப்பொலிவு பெறுகின்ற நிலையில் தமிழர் அடையாளம் மீண்டுமொரு முறை இந்தப் புதிய ஆண்டான 2024 இல் தடம் பதித்துக் கொள்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |