பிரதமர் ஹரிணி தலைமையில் தேசிய தைப்பொங்கல் நிகழ்வு
உழைப்பின் கண்ணியத்துக்கும் இயற்கையிடமிருந்து கிடைத்த பாதுகாப்புக்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஓர் உன்னத கலாசார பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில், உலகவாழ் தமிழ் மக்கள் கொண்டாடும் தைப்பொங்கல் பண்டிகையின் தேசிய விழா பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.
இந்தத் தைப்பொங்கல் விழாவை பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பொறுப்பு
நிகழ்வில் பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோரின் தலைமையில் தைப்பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இந்த விழாவில் இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இந்த வருட தைப்பொங்கல் தினத்தில், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசார மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில் ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் செயற்பட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டார்.
தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய சாரமாக விளங்குவது, பொறுமை மற்றும் சூழல் மீதான மரியாதை ஆகிய முக்கிய பண்புகளுடன், ஒரு நாடாக முன்னேறுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாடு புதியதோர் யுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொள்கை மற்றும் மனப்பான்மை சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது சவாலானது என்றாலும், அது ஒரு அத்தியாவசிய பணி என்றும் பிரதமர் கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




