பிரித்தானியாவில் தமிழர்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெற்ற சிறப்பு தைப்பொங்கல் விழா
பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், டவுனிங் ஸ்ட்ரீட் எண் 10-ல் சிறப்பு தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை (16 ஜனவரி 2026) இடம்பெற்றுள்ளது.
தைப்பொங்கல் விழா
அமைச்சர் ஸ்டீவ் ரீட் மற்றும் பிரித்தானியாவின் முதல் தமிழ் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர்.

தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதற்குப் பின்னர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பிரித்தானிய தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மட்டுமின்றி, கலை மற்றும் பொழுதுபோக்கு, கல்வி, பொது சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடிகளும் கலந்து கொண்டனர்.
இது, பிரித்தானியாவில் தமிழ்ச் சமூகத்தால் வழங்கப்பட்ட நீண்ட கால மற்றும் பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகளை பிரதிபலிப்பதாக அமைந்தது.
தமிழ் புலம்பெயர் சமூகம்
இதுகுறித்து, வீடமைப்பு, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் தெரிவித்ததாவது, “வன்முறைகளும் கொடூரமான உள்நாட்டுப் போரும் காரணமாக பல தமிழர்கள் பிரித்தானியாவில் தஞ்சம் பெற்று தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பினர்.

ஆனால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, இன்று நாம் காணும் பிரித்தானியாவையும் கட்டியெழுப்ப உதவியுள்ளீர்கள். இன்று டவுனிங் ஸ்ட்ரீட்டில் நிற்கும் போது, கலை, கலாசாரம், அறிவியல், வணிகம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் பிரித்தானிய தமிழ் சமூகத்தின் திறமைகள் எவ்வளவு விரிவாக உள்ளன என்பதை பார்க்க முடிகிறது.
பிரித்தானிய அரசின் சார்பில், நீங்கள் செய்ததும், செய்து கொண்டிருப்பதும், எதிர்காலத்திலும் செய்ய உள்ள பணிகளுக்கும் நன்றி தெரிவித்து, உங்கள் சமூகத்தையும் எங்கள் நாட்டையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன்.
இந்த தொழிற்கட்சி அரசாங்கம் எப்போதும் உங்களுடன் நிற்கும். இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்ததாவது: “பிரித்தானிய தமிழ் சமூகத்தின் வெற்றி, நவீன பிரித்தானியாவின் வாக்குறுதியையும், தமிழ் புலம்பெயர் சமூகத்தின் மன உறுதியையும் பிரதிபலிக்கிறது.
தமிழர்களின் கதை
என் பெற்றோர் தங்கள் பிறந்த நாட்டில் இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்காக,பிரித்தானியாவில் கடுமையாக உழைத்து என் எதிர்காலத்தை உருவாக்கினர். இது லண்டன், பிரித்தானியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் பல தமிழர்களின் கதையாக உள்ளது.
தமிழ் பாரம்பரிய மாதத்தை கௌரவிக்கும் வகையில், அடுத்த தலைமுறை தமிழ் மாற்றத்தை உருவாக்கும் இளைஞர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்களுக்காக பிரதமர் டவுனிங் ஸ்ட்ரீட் எண் 10-ஐ திறந்துவைத்துள்ளதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

தைப்பொங்கல் என்பது அறுவடைத் திருவிழாவாகிய எங்கள் பழமையான கலாசார மரபுகளின் கொண்டாட்டம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற தமிழ்ச் சொல்லாடல், புதிய நம்பிக்கை, புத்துணர்வு மற்றும் மாற்றத்திற்கான ஆவலை குறிக்கிறது.
அதையே இந்த தொழிற்கட்சி அரசாங்கம் இன்றைய தினம் கொண்டாடுகிறது. இதே உத்வேகத்துடன் தான் நாம் புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம்” என குறிப்பிட்டார்.