தாய்லாந்து எல்லை மோதல்: 20000இற்கும் அதிகமான கம்போடிய மக்கள் வீடு திரும்ப முடியாது துயரம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதல்களால் 20,000க்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதாக ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஆய்வு செய்யச் சென்ற ஐ.நா சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ், அந்நாட்டின் தலைநகர் புனோம் பென்னில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கம்போடிய மக்கள்
கடந்த ஆண்டின் இறுதியில் எல்லைப் பகுதியில் சுமார் 6,50,000 மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், பெரும்பான்மையானோர் திரும்பினாலும் 20,000க்கும் அதிகமானோர் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நகரங்கள் மற்றும் கிராமங்களை தாய்லாந்து இராணுவத்தினர் இன்னமும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிய அவர், ஆயுத மோதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது சர்வதேச சட்டப்படி அவர்களின் உரிமை என்றும், தாய்லாந்தும் கம்போடியாவும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், கம்போடிய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கவில்லை என்றும், இருதரப்பு போர்நிறுத்த ஒப்பந்தப்படியே செயல்படுவதாகவும் தாய்லாந்து தெரிவித்து வருகிறது.
எல்லை மூடல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் வர்த்தகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கம்போடியாவில் அதிகரித்து வரும் இணைய மோசடி மையங்கள் பெரும் மனித உரிமைச் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், இதில் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா பிரதிநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri