சுவிஸ் பொதுத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கலை தொடங்கவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சுவிட்ஸர்லாந்து நாட்டின் பொதுத் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வேட்பு மனுத் தாக்கலானது இன்றையதினம் (15.03.2024) தொடங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய முடிவு
குறித்த ஊடக அறிக்கையில் மேலும்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது 2010ஆம் ஆண்டு முதல் தமிழீழ மக்களின் நீதிக்கும் இறையாண்மைக்குமாக ஜனநாயக வழியில் நேர்கொண்ட கொள்கையுடன் போராடி வருகின்றது.
அதன் நான்காவது தவணைக்கான சுவிட்சர்லாந்தின் 7 தேர்தல் தொகுதிகளில், 10 பிரதிநிதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (15.03.2024) தொடங்கவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுவிட்ஸர்லாந்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பிரதிநிதிகள் தெரிவு
சுவிட்ஸர்லாந்து நாட்டினை ஏழு தேர்தல் பிராந்தியங்களாக பிரித்து, அவற்றிலிருந்து முறைப்படி 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் மக்கள் செறிவைப் பொறுத்து, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு:
1. பெர்ன், சோலோதர்ன் (Bern, Solothurn) - 2 பிரதிநிதிகள்
2 . சூரிச், ஷாஃப்ஹவுசென் (zürich, Schaffhaussen, Thurgau) - 2 பிரதிநிதிகள்
3. பாசெல், ஆர்கௌ, ஜூரா (Basel, Aargau, Jura) - 1 பிரதிநிதி
4. லுசர்ன், சக், நிட்வால்டன், ஒப்வால்டன், ஷ்விஸ், உரி (Luzern, Zug, Nidwalden, Obwalden, Schwyz, Uri) - 1 பிரதிநிதி
5. வாட், வாலைஸ், ஜெனீவ், ஃப்ரிபோர்க், நியூசெட்டல் (Vaud, Valais, Genève, Fribourg, Neuchâtel) - 2 பிரதிநிதிகள்
6. கிராபண்டன், கிளாரஸ், செயின்ட் - கேலன், அப்பன்செல்லர் (Graubinden, Glarus, St - Gallen, Apenzeller) - 1 பிரதிநிதி
7. டெசின் (Tessin) - 1 பிரதிநிதி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுத் தாக்கல், மார்ச் 15ஆம் நாளன்று தொடங்கி எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
எதிர்வரும் மே 05, 2024 அன்று பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. தேர்தல் நடைமுறை விதிகள், வேட்புமனுக்கள் மற்றும் இதர விடயங்கள் சுவிஸ் தேர்தல் ஆணையத்தின் குறித்த மின்னஞ்சல் வழியே பெற்றுக் கொள்ளலாம் என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |