பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் : எம்.ஏ.சுமந்திரன் (Photos)
இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டுமானால், இந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமிருக்க வேண்டுமானால் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், இதற்கு அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி வடகிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையைத் முன்வைத்து நாடு பூராகவும் முன்னெடுத்துவரும் கையெழுத்துப் போராட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பற்றி தமிழ் சமூகத்திற்கு எவரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இந்த சட்டத்தின் கீழ் கூடுதலாக கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தமிழ் மக்கள். சிங்கள இளைஞர்களும் 1988,89ஆம் ஆண்டுகளில் இந்த சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
நான் சட்டத்தரணியாக தொழில் செய்த காலத்தில் அவர்கள் சார்பாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளில் முன்னிலையாகியுள்ளேன்.

குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்று இருந்தாலே ஒருவர் தனக்கு எதிரான சாட்சியமாக அதனை கொடுத்து விட முடியும். இந்த சட்டத்தில் உள்ள பிரதான ஆட்சேபனைக்குரிய விடயம் அது தான்.
பொலிஸார் எந்தவித விசாரணையும் செய்யவேண்டிய அவசியம் கிடையாது. ஒருவரை சித்திரவதை செய்து குற்றவாக்கு மூலத்தினைப்பெற்றுக்கொண்டால் அந்த குற்றத்தினை அவர்கள் தீர்த்துவிட்டதாக கருதப்படும், அவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு கொடுக்கப்படும்.
இவ்வாறு பல விடயங்கள் காணப்படுகின்றன.காலவரையறையின்றி ஒருவரை தடுத்துவைத்திருக்கமுடியும். இந்த ஏற்பாட்டை தவிர 18மாதங்கள் தடுத்துவைப்பதை 12மாதங்களாக குறைக்கப்போவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த 18 மாதங்கள் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒருவரை தடுத்துவைத்திருக்கும் காலமாகும். ஆனால் அவரை நீதிமன்றில் நிறுத்திவிட்டால் நீதிவானுக்கு இருக்கும் ஒரேயொரு அதிகாரம் அவரை விளக்கமறியலில் வைப்பது தான்.
வழக்கு முடியும் வரையில் அவரை விளக்கறியலில் வைக்க வேண்டும் என்று பிரிவு 07 சொல்கின்றது. ஆகையினால் 18மாதங்களை 12மாதங்களாக குறைத்துவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை.
12மாதங்களுக்குள்ளே அவரை
நீதிவானுக்கு முன்பாக நிறுத்தினால் காலவரையறையின்றி தடுத்துவைக்க முடியும்.
தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரிக்கை வைக்கலாம் என்ற புதிய
திருத்தம் கொண்டுவந்துள்ளார்கள்.
ஆனால் மேலும் முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதற்கு கீழாக மேலும் முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகு அதற்கு கீழ் உள்ள மேல் நீதிமன்றம் மீண்டும் அவரை விளக்கமறியலில் வைக்க முடியும் என்று தான் அதில் சொல்லப்பட்டுள்ளது.

உலகத்தில் எங்கும் இவ்வாறான சட்டம் இல்லை. இவ்வாறான சட்ட திருத்தங்களையே கொண்டு வருகின்றார்கள். அதனால் தான் இந்த திருத்தம் கண் துடைப்புக் கூட கிடையாது என நாங்கள் கூறியுள்ளோம்.
பலர் எங்களிடம் கடந்த ஆட்சிக்காலத்தில் இதனை நீக்ககூடிய காலம் இருந்தது ஏன் நீங்கள் அதனை செய்யவில்லையென கேட்கின்றனர்.அவ்வாறு கேட்கின்றவர்களுக்கு ஞாபகமறதி அதிகம் இருக்கின்றது.
சென்ற ஆட்சிக்காலத்தில் இந்த சட்டமூலத்தினை இல்லாம் செய்கின்ற சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாத தடுப்பு சட்டம் என்ற அடிப்படையில் அது கொண்டுவரப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக ஒழித்து சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப பயங்கரவாத தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது.அது கொண்டுவரப்பட்டபோதும் அதனை நாங்கள் எதிர்த்தோம்.அதிலும் மோசமான பல விடயங்கள் இருந்தன.
அதனை நாங்கள் எதிர்த்த காரணத்தினால் ஒரு நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று, நாங்கள் எதிர்த்த அனைத்து விடயங்களும் மாற்றியமைக்கப்பட்டன. அப்படியிருந்தும் வேறு சில புதுவிடயங்கள் அதிலிருந்த காரணத்தினால் பலர் எதிர்த்தார்கள், அவையும் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்லியிருந்தோம்.
இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டது 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்.அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட விரோதமாக பிரதமரை நீக்கி மகிந்த ராஜபக்ஸவினை நியமித்த அரசியலமைப்புக்கு எதிரான புரட்சி காரணமாக இந்த நாடு ஸ்திரமற்ற தன்மைக்கு சென்றுவிட்டது.
அரசாங்கத்திற்கு அங்கு பெரும்பான்மையும்
இருக்கவில்லை.
அதனை தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினை
நீக்கினால் எங்களால் தாக்குதலை தடுக்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர்
கோசத்தினை எழுப்பி, கடுமையான சட்டமும் கடுமையான ஆட்சியாளர்களும் வேண்டும் என்ற
கோசத்தினை எழுப்பித்தான் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படாலும் கோத்தபாய ராஜபக்ச
ஜனாதிபதியானதும் நடைபெற்றது.
இந்த சரித்திரம் தெரியாதவர்கள் இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. புதிய சட்டமூலத்தில் குறைகள் இருக்கலாம்.பலவிடயங்கள் இருந்தன. நாங்கள் முயற்சிசெய்தோம்.முயற்சிசெய்வில்லையென யாரும் கூறமுடியாது.

தற்போதுள்ள அரசும் இதற்கு முன்பிருந்த அரசுகளும் இந்த சட்டத்தினை நீக்குவோம் என்று சர்வதேசத்திற்கு வாக்குறுதியளித்துள்ளனர்.அந்த வாக்குறுதி 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டது.
அது செய்யப்பவில்லையென்ற காரணத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் ஜிபிஎஸ் சலுகையினை வழங்குவதா இல்லையான என ஆராய்ந்து வருகின்றது. இந்த காலகட்டத்தில் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற கடுமையான அழுத்ததினை கொடுக்கின்றோம்.
இது தமிழ் மக்கள் மட்டும் சொல்லும் விடயமல்ல. இது நாடு முழுவதும் உள்ள ஜனநாயகத்தினை மதிக்கின்ற, மக்கள் அனைவரும் சேர்ந்து எழுப்புகின்ற குரலாகயிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை நாடளாவிய ரீதியில் இதனைச்செய்கின்றோம்.
ஒரு குறித்த இளைஞர் அணியை நோக்கி ஆறுமாத காலத்திற்கு தற்காலிகமானதாக கொண்டுவரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இன்று 42வருடங்களையும் கடந்து பயணித்துக்கொண்டிருக்கின்றது.
இது மனிதாபிமானத்திற்கு எதிரான சட்டம், உலக ஒழுங்குகளுக்கு எதிரான சட்டம் ,உலக மனித உரிமைகள் விழுமியங்களுக்கு மாறான சட்டம். இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டுமானால் இந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமிருக்க வேண்டுமானால் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
இதற்கு அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும். இன்று சிங்கள மக்கள் பெருமளவில் இந்த சட்டத்தினை நீக்குவதற்கு ஆதரவு வழங்கிவருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் நலுவிடாமல் அனைத்து இன மக்களும் இணைந்து எடுக்கும் முயற்சியாக இதனை நாங்கள் முன்கொண்டு சென்று மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.
வெறுமனே சர்வதேசத்தின் அழுத்தங்களினால் மட்டுமல்ல இந்த நாட்டிலேயே எழுப்பப்படுகின்ற குரல் இந்த நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் இதனை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அனைத்து இன மக்களின் தலைவர்களின் ஆதரவினை வேண்டுகின்றோம்.
இதேவேளை, வடக்கு,கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடுவதில்லையென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை மாற்றப்பட்டு தேர்தலில் போட்டியிட்டது தொடர்பில் எடுத்த முடிவுகள் தொடர்பில் யாருக்கும் எதுவும் தெரியாத நிலையே இருந்தாகவும் மட்டக்களப்பில் இடம்பெற்ற மற்றுமொரு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் எந்தவித பேச்சுவார்தைகளும் முன்னெடுக்கப்படாமல்,எந்தவித மக்கள் மத்தியிலும் எந்த கருத்துகளும் பெறாமல் நடைபெற்றதாகவும், இதுவரையில் ஒரு பொதுமகன் கூட ஏன் கொள்கையினை மாற்றினீர்கள் என்று எந்த கேள்வியும் கேட்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri