பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவது அரசாங்கத்தின் கேலிக்கூத்தான செயற்பாடு: சச்சிதானந்த குருக்கள் (Photos)
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராளிகளை அழித்தொழித்துவிட்டதாக கூறிக்கொண்டு மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தற்போதும் பயன்படுத்துவதானது இந்த அரசாங்கத்தின் கேலிக்கூத்தான செயற்பாட்டையே காட்டுகின்றது என மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் பெறும் போராட்டம் இன்று மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையிலும் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதம குருக்கள்,
சர்வதேச ரீதியில் அனைவராலும் வியக்கத்தக்க வகையில் தமிழ் மக்களின் உரிமையினைக்கேட்டு போராடிக்கொண்டிருந்த போராளிகளை பயங்கரவாதிகள் என்று பெயரை சூட்டிக்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கை அரசாங்கம் கொண்டுவந்து பல அட்டூழியங்களை செய்தது.
குறிப்பாக தமிழ் பேசும் மக்களை கொடூரமான முறையில் நடாத்தி இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராளிகளை அழித்து ஒழித்துவிட்டதாக கூறிக்கொண்டு அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை இன்றும் வைத்துக்கொண்டிருப்பதானது இந்த அரசாங்கத்தினது கேலிகூத்தான செயற்பாடாகவே இருக்கிறது.
எனவே சர்வதேச ரீதியில் உள்ள நியாயவாதிகள் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கையிலிருந்து நீக்கி, தமிழ் மக்களுக்கான விடிவினை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் ஒரு கட்டமாக இப் போராட்டம் கொக்கட்டிச்சோலையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள், ஆலய வண்ணக்கர்கள், நிர்வாகசபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம், தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் திபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கொக்கட்டிச்சோலை பகுதியில் கையெழுத்திடும் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டு தங்களது கையெழுத்துகளையிட்டு ஆதரவு வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
