சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் முடிவு-நீதியமைச்சர்
22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து தற்போது செயற்பட்டு வரும் சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் நியமனம்

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களை இரண்டு வாரங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்பட்ட பின்னர், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை இரண்டு வார காலத்திற்குள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
22வது திருத்தச்சட்டத்தினால், புத்துயிர் பெறும் சுயாதீன ஆணைக்குழுக்கள்

தேசிய தேர்தல் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு என்பன 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் மீண்டும் புத்துயிர் பெறும் நிறுவனங்களாகும்.
22வது திருத்தச்சட்டத்திற்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவையே நியமிக்கும். இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த 20வது அரசியலமைப்பு்த் திருத்தச்சட்டத்திற்கு அமைய ஜனாதிபதிக்கே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.