தலைநகரில் பாரிய போராட்டம்! பதற்றம் அதிகரிப்பு - கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தும் பொலிஸார்(Video)
புதிய இணைப்பு
கொழும்பு – கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு இவ்வாறு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாருக்கும்,ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 50 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் கொழும்பு வர்த்தக மையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்ற போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப்போராட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசுக்கெதிராக வலுப்பெறும் கோஷங்கள்
இப்போராட்டத்தில் மதகுருமார்கள், தொழிற்சங்கத்தினர், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றன நிலையிலேயே இப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் குவிப்பு
ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலிமுகத்திடலில் கோட்டா கோ கம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு உலக வர்த்தக மையத்துக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறது.
யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
50 ஆவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டம் (Video) |