மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றின் முன் பதற்ற நிலை (VIDEO)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி, உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக பதற்றமான நிலைமையேற்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவரை இடமாற்றம்செய்யுமாறு கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை பழைய மாணவர்களினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் குறித்த பாடசாலையின் ஆசிரியருமான பொ.உதயரூபனை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆசிரியர் மீது 41குற்றச்சாட்டுகள் திணைக்களத்தினால் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் குறித்த ஆசிரியரை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றஞ்சாட்டப்பட்டது.
பாடசாலைகளில் பல குழப்பமான செயற்பாடுகளிளை குறித்த ஆசிரியர் முன்னெடுத்துவருவதுடன் அவரினால் பாடசாலையில் மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது பாடசாலைக்கு வருகைதந்த ஆசிரியர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டதுடன் முரண்பாடுகள் ஏற்பட்டதனால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.
ஒரு ஆசிரியரின் செயற்பாட்டுக்காக முழு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிக்கும் வகையில் செயற்படுவதை அனுமதிக்கமுடியாது எனவும் இதன்போது ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலரால் ஆசிரியர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டதாகவும் இதன்போது ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளரின் சார்பில் வருகைதந்த மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் சா.ரவிச்சந்திரா ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினால் வழங்கப்பட்ட மகஜரை மாகாண கல்வி பணிப்பாளருக்கு அனுப்பி நடவடிக்கையெடுப்பதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் பாடசாலை நுழைவாயில்களும் திறக்கப்பட்டன.
குறித்த ஆசிரியரின் செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட திணைக்களங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளபோதிலும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் சா.ரவிச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களை தாக்கமுற்பட்டதாக கூறி ஆசிரியர்கள் சிலரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.