மூங்கிலாற்றில் அமைக்கப்பட்ட சிவன் சிலை காரணமாக முறுகல் நிலை
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட மூங்கிலாற்று கிராமத்தில் உள்ள பொதுக்காணி ஒன்றில் சிவராத்திரியினை முன்னிட்டு நேற்று சிவன் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்த நிலையில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு பிரசன்னமாகியதால் மக்களுக்கும், சபை உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதேச சபையின் அனுமதி பெற்ற பின்னரே ஆலயங்கள், கட்டடங்கள் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையினை சபையின் உறுப்பினர் எஸ்.குகனேசன் மக்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், குறித்த காணி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளதால் பிரதேச சபை எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக சபையின் தவிசாளர் அ.தவக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் பல கிறிஸ்தவ சபைகள் காணப்பட்ட போதும் என்னூறு வரையான இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். மக்கள் ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் நீண்ட தூரம் தான் செல்லவேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் சிவராத்திரியினை முன்னிட்டு சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல சபைகள் மற்றும் ஏனைய மதங்களில் சிலைகள் அனைத்தும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அனுமதி ஊடாக கட்டப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, இது குறித்து கிராம சேவையாளருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதென்றும், பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த கிராமத்தில் கிராம மக்களின் விருப்பத்திற்கு அமைவாகவே இந்த சிலை வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளதென கிராம அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.







