ரணிலின் நெருங்கிய சகா உட்பட பத்து பேர் வங்கிக்கடனை மீள்செலுத்தவில்லை: இரா.சாணக்கியன் (VIDEO)
கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியில் 54 பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் தயாகமகே உட்பட பத்து பெரும் பணம் படைத்த வர்த்தகர்கள் அவற்றினை மீளச் செலுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் மக்கள் எழுச்சிமூலம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிரான மிகப்பெரும் துரோகச்செயலை செய்து பிரதமர் பதவியினை ஏற்று ஜனாதிபதி ராஜபக்சவை பாதுகாப்பதற்கான முழு முயற்சியையும் முன்னெடுத்துள்ளார்.
புதிதாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரும் எரிபொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த விலையேற்றம் தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
180ரூபாவாகயிருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி 365ரூபாவுக்கு வந்துள்ளது. பொருளாதாரத்தினை சரியாக முகாமை செய்யாத காரணத்தினாலேயே இந்த நிலைமையேற்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த பிழையான தீர்மானங்களே நாடு இந்த நிலைக்குச் செல்வதற்குக் காரணமாகவுள்ளன.
எரிபொருள் அதிகரித்தால் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இன்று மக்கள் இந்த பொருளாதார நிலைமைக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையுள்ளது. இந்த பிரச்சினைக்குத் தீர்வாக என்ன செய்யவேண்டும் என இலங்கைக்கு உதவும் பல்வேறு அமைப்புகளும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்று கூறிவிட்டது.
இலங்கையானது பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியே வருவதாகயிருந்தால் இந்த அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஜனாதிபதி, மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய பிரதமர்,மக்கள் நம்பிக்கைவைக்கக் கூடிய நாடாளுமன்றம், மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்கக்கூடிய அமைச்சரவை இருப்பதுதான் அரசியல் ஸ்திரத்தன்மையாகும்.
இன்று சர்வதேசம் மறைமுகமாகச் சொல்வது கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்லவேண்டும். கோட்டா கோ ஹோம் என்ற அலை அனைத்து பகுதிகளிலும் ஒலிக்கும் நிலையில் ஜனாதிபதி அவரது அதிகாரத்தினை குறைக்கும் சட்டம் என்ற போர்வையில் 21ஆவது திருத்தச் சட்டத்தினை கொண்டுவந்து மக்களை ஏமாற்றும் நாடகத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.
இந்த நாடு மிக பாரதூரமான நெருக்கடிகளைக் கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களைப் பெற்றவர்கள் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாகப் பெற்றுள்ளார்.
அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துபேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார். இது ராஜபக்ச குடும்பத்தின் காசும் அல்ல தனியாரின் காசும் அல்ல. மக்களின் காசு.இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நான் பேசியதற்காக இன்று காலை மக்கள் வங்கியின் தலைவரினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடன்களை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. மூன்று பில்லியன் பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு வருடத்திற்குப் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆராய்வதாகத் தெரிவிக்கின்றனர்.
லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களைப் பறித்துச்செல்கின்றீர்கள், சிறு வர்த்தகர்களின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள். தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்றால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக நிதியமைச்சர் பதவியேற்றதன் பின்னர் அந்த அமைச்சின் கீழ் வரும் மக்கள் வங்கி ஊடாக முதல் வேலையாக எனக்கு கடிதம் அனுப்பும் வேலையைத்தான் செய்துள்ளார். இனங்காணப்பட்ட முதல் பத்து பேருக்குக் கடந்த ஐந்து வருடத்தில் 54பில்லியன் ரூபா கடன்கள் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இது கோப் குழுவினால் பெறப்பட்ட தகவல்.இதனை நான் பகிரங்கப்படுத்தியதற்காக என்னை இடைநிறுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.கடன்பெறப்போகும் போதே வங்கிகளில் ஏதாவது அடமானம் வைத்தே பணம் வழங்கப்படுகின்றதே.ஆனால் இவ்வளவு பெரிய நிதியானது எந்தவித ஆதனமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பில் மக்கள் தினமும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இன்று வேட்டியை மடித்துக் கட்டுவது குறித்துப் பேசுகின்றனர். ஆரையம்பதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோலுக்கும் எரிவாயுவுக்கும் தினமும் கஷ்டப்படுகின்றனர்.
அதனை வீதிக்குச் சென்று மக்களின் நிலைமையினை பார்த்து அதனைத் தீர்த்துவைக்க முயற்சி செய்யுங்கள்.மேலதிகமாக 2000எரிவாயு சிலிண்டர்களை மட்டக்களப்புக்குக் கொண்டுவரமுடியாத வக்கற்ற தலைவராகவே உங்கள் தலைவர் இருக்கின்றார்.
வேட்டியை மடித்துக்கட்டத் தேவையில்லை,மக்களுக்கு ஏதாவது செய்யச் சொல்லுங்கள் இல்லாது விட்டால் பதவி விலகிவிட்டு வீட்டுக்குச் செல்லச் சொல்லுங்கள்.
மகிந்த ராஜபக்ச பிரதமராகயிருந்ததற்கு பதிலாக ரணில் (ராஜபக்ச) பிரதமராக தற்போதுள்ளார். பிள்ளையான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது போன்று ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவு அவர் வழங்கலாம். இதில் புதியதொரு வித்தியாசம் இல்லை.
தற்போதும் பசில் ராஜபக்ஸதான் நாடாளுமன்றத்தினை
இயக்குகின்றார். பிள்ளையானுக்கும் கொள்கையில்லை, ரணிலுக்கும்
கொள்கையில்லை. இருவரும் ஒன்றாகப் பயணிக்கமுடியும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
