மட்டக்களப்பு மாநகரசபைக்கு தற்காலிகமாக பூட்டு
மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படத்தை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று முன்னெடுக்க அன்டிஜன் பரிசோதனைகளில் மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் மூன்று உத்தியோகத்தர்கள் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏனைய ஊழியர்களும் இன்று புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் தலைமையில் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் மேலும் மூன்று ஊழியர்கள் கோவிட் தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேநேரம், இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 60க்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.








