தொலைபேசி ஊடாக தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு எதிராக புதிய சட்டம்
தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கான இலங்கை தொலைத்தொடர்பு (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்தவினால்(Susil Premajayantha) சபையில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தின்படி, தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்பவர், அல்லது செய்திகளை அனுப்புபவர், பிற சந்தாதாரர்களின் தொலைபேசி இலக்கங்களை நியாயமான காரணமின்றி வெளியிடுபவர்கள், எந்தவொருவருக்கும் சிரமம் அல்லது தேவையில்லாத கவலையை ஏற்படுத்துவோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களை மேற்கொள்பவரின் தொலைபேசி இணைப்புகளைத் துண்டிக்கவும் இந்த சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது அமைதிக்கு இடையூறு
“வேண்டுமென்றே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் அல்லது பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் செய்திகளை அனுப்பும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தொடர்ந்து குற்றம் நடந்தால், குற்றம் செய்தவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும்,தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்கினால், அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தவறான தகவல்களை அனுப்பும் தொலைத்தொடர்பு கருவிகள் நீதிவானின் உத்தரவு மூலம் அரசுடமையாக்கப்படும்.
மேலும், இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாக்கவும், முன்மொழியப்பட்டுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு சட்டமூலத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படும்.
இதற்காக இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் பயன்படுத்தப்படவுள்ளனர்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |