மலையகத்திலும் ஆசிரியர்கள் போராட்டம்
தேசிய எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு அதிபர் - ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தால் இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வைப் பெற்று தருமாறு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஹட்டனில் இடம்பெற்றது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணியையடுத்துப் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுட்டனர்.
மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹட்டன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ் தரிப்பிடம் வரை வந்தது. அங்கு அதிபர் - ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர் - ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்த
ஆர்ப்பாட்டத்தில் நீண்டகாலக் கோரிக்கையான அதிபர் - ஆசிரியர்களின் கொடுப்பனவை
வழங்கக் கோரியும், கல்வித்துறையிலுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வைப்
பெற்றுத்தரக் கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.
கொட்டகலை போராட்டம்
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டகலை நகரில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கொட்டகலை புகையிரத கடவைக்கு முன்னால் போராட்டம் ஆரம்பமானதுடன், பதாதைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பிய வண்ணமும் கொட்டகலை பிரதேச சபை வரை போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதற்கு உடனடி தீர்வு வேண்டும். இனியும் காலம் இழுத்தடிக்கப்படக்கூடாது என அதிபர், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.











