பொலிஸ், சுகாதார அதிகாரிகளின் தடையையும் மீறி யாழில் ஆசிரியர்கள் வாகனப்பேரணி போராட்டம்
தமது சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கோரியும் ஆசிரியர்களால் இன்று யாழ்ப்பாணத்தில் வாகனப் பேரணிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளியிலிருந்து ஆரம்பித்து, யாழ். நகர வீதி வழியாக மாவட்ட செயலகம் வரையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
வாகனப் பேரணியானது ஆரம்பமாகி நகரை அடைந்தபோது பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் தற்போதைய நாட்டு நிலைமையில் இந்தப் பேரணியை நடத்த முடியாது எனத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எனினும், தாம் சுகாதார ஒழுங்கு விதிகளைப் பின்பற்றியே பேரணியை நடத்துவதாகக் கூறி ஆசிரியர்கள் பேரணியைத் தொடர்ந்தனர்.
இப்பேரணியில் 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









