மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் நாட்டில் மிதிக்கப்படுகின்றார்கள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
அதிபர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்காமல் அவர்களை நசுக்க முற்படுவது ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கு நல்லதல்ல என மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் (Puspha Wishvanadhan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
”இன்று அரசாங்கத்தோடு இருக்கும் மக்கள் பிரதிநிகள் நிச்சயமாக யோசிக்க வேண்டும். தான் இவ்விடத்திக்கு வருவதற்கு ஊன்றுகோலாய் இருந்தவர்கள் ஆசிரியர்கள்.
நமக்கு ஒரு வழிகாட்டியாய் இருந்ததாலே இவ்விடத்தில் நிற்கின்றோம் என நினைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென முன்வந்திருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள்
ஆனால், தமது பிரச்சினைகளை கேட்க வந்தவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், அடி, உதை என அராஜகமான செயலை அரசாங்கம் செய்வதை மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் வன்மையாக கண்டிக்கின்றேன்.
மலையக தொழிலாளர் முன்னணி பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு மட்டும் குரல் கொடுக்கும் தொழிற்சங்கம் கிடையாது. சமூகத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அனைவருக்கும் ஒரு பிரச்சினை என்றால் அவர்களின் நலன் சார்ந்து குரல் கொடுக்கும் ஒரு தொழிற்சங்கம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவாக காணப்படும் மலையக தொழிலாளர் முன்னணிக்கு ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் அவர்கள் சமூகத்தில் படும் இன்னல்கள் தொடர்பிலும் நன்கு அறிவோம்.
முன்னெடுக்கும் போராட்டங்கள்
காரணம் சமூகத்தோடு ஒன்றித்து பயணித்து கொண்டிருக்கின்றோம். எனவே, எந்த பிரச்சினைக்கும் நாங்கள் முன்னின்று குரல் கொடுப்போம்.
இனியாவது தம்மை ஏணியாக நின்று ஏற்றிவிட்ட ஆசிரியர்களின் நிலையறிந்து அவர்களின் சம்பள பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களோடு மலையக தொழிலாளர் முன்னணியும் போராட்டத்தில் குதிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |