சாரி தவிர்ந்த வேறு ஆடைகள்! புகைப்படங்களை வெளியிட்ட ஆசிரியர்கள் தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலைகளுக்கு சாரிக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து வந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பல பாடசாலைகளில் நேற்றையதினம் (21.11.2022) ஆசிரியர்கள் சிலர் புடவைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
வைரலான புகைப்படங்கள்
இந்த நிலையில் குறித்த ஆசிரியர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக புடவை அணிவதற்கு அதிக செலவாகுவதாகவும், அதற்கு பதிலாக வேறு உடைகள் அணிவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான சூழலிலேயே பாடசாலைகளுக்கு வழமைக்கு மாறான ஆடைகளில் சென்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்ட ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என ஷாந்த பண்டார கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.