ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்காணல் - கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்காணலின் போது மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினர் அநீதிக்கு உள்ளானால், அது தொடர்பில் தனக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறும், எதிர்காலத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இரண்டாம் கட்ட நேர்காணல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் தலையீட்டின் பேரில், நேற்று (13) நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையற்ற பட்டதாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் கட்ட நேர்காணல்
தேசியத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் நடத்தப்படும்போது மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர் தேர்வில் 17, 000 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர், ஆனால் அது முதல் கட்டம் மட்டுமே என்றும், தற்போதுள்ள காலி இடங்களின் அடிப்படையில் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு மற்றவர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்றும், 2022 ஆம் ஆண்டு வரத்த்தமானி அறிவிப்பின்படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அதன்போது தெரிவித்துள்ளார்.
நேர்காணல்களின் போது மாற்றுத்திறனாளிகளை நியமிக்கும் முறைகள் குறித்து நேர்காணல் செய்பவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் ஏதேனும் அநீதி நிகழ்ந்தால், அது குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், ஆட்சேர்ப்பின் போது வெளிப்படையாகவும் நியாயமாகவும் தலையிட தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
பாடசாலை அளவிலான தேசிய மதிப்பீட்டுச் செயல்பாட்டில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மதிப்பிடுவதற்கான ஒரு முறையான வழிமுறையைத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கற்றல் உதவிகளை வழங்குவதற்கும் தேவையான உபகரணங்களை உருவாக்குவதற்கும் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பார்வைக் குறைபாடுள்ள பட்டதாரிகள் குழுவினர் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.