தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: பொறுப்புடன் கையாளப்பட வேண்டும்!
தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களது காணிகளை கையகப்படுத்தி சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரை காணியை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரும் ஒவ்வொரு போயா தினத்திலும் போராட்டம் நடத்தி வந்திருந்தனர்.
தொடர்ச்சியான போராட்டம் மற்றும் காணி உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கமும் கவனம் செலுத்தியிருந்தது.
புத்தர் சிலை விவகாரம்
குறிப்பாக கட்டப்பட்ட விகாரை காணி மக்களுடையது என்பதற்கான ஆவணங்கள் உள்ளன. இதனை நாகதீப விகாரை விகாராதிபதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இந்த விடயம் தெரியும்.
ஆனால் கட்டப்பட்ட விகாரையை என்ன செய்வது என்பதே குழப்ப நிலை. நாட்டில் இன, மத முரண்பாடுகளை தோற்றிவிக்காது இதனை கையாள வேண்டிய பெரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
கடந்த வருட இறுதியில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ் மக்களை சமாளிக்க புத்தர் சிலையை இரவோடு இரவாக அகற்றியமையும், பின்னர் தென்னிலங்கையின் இனவாதிகளை சமாளிக்க புத்தர் சிலையை மீள வைத்தமையும் என அது தொடர்பில் இருவேறுபட்ட தீர்மானங்களை எடுத்திருந்தமையும் பின்னர் நீதி மன்றத்தின் ஊடாக அதனை அணுகி இருந்தமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
பல்லின சமூகம் வாழும் இலங்கை தீவில் 2009 மே 18 இற்கு பின்னரான காலப் பகுதியில் காலத்திற்கு காலம் ஆட்சி வந்த அரசாங்கங்களால் திட்டமிட்ட ரீதியில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்குதல், பௌத்த விகாரைகளை நிறுவுதல் போன்ற செயற்பாடுகள் வடக்கு - கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டில் தொடர்ந்தும் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி இருந்தது.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு - கிழக்கு தமிழ், முஸ்லிம் ம்க்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருந்ததுடன் இனவாதம், மதவாதம் என்பவற்றை இல்லாமல் செய்து இந்த நாட்டை இலங்கையர்களாக ஒன்றுபட்டு ஒருமித்த தேசமாக கட்டியெழுப்புவோம் எனக் கூறி வருகின்றது.
ஆனாலும், அரசாங்கம் முன்னெடுக்கும் இன, மத நல்லிணக்கச் செயற்பாடுகளை குழப்பும் வகையில் சில பௌத்த பிக்குகளும், சில அரச திணைக்களங்களும், சில அரசில்வாதிகளும் செயற்பட்டு வருகின்றமையையும் மறுத்துவிட முடியாது.
இலங்கையில் ஆபத்தான நபர் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்கு தப்பியோட்டம்: விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை
தையிட்டி விகாரை விவகாரம்
இந்தநிலையிலேயே, தையிட்டி விகாரை விவகாரமும் ஆக்கிரமிப்பு அடையாளமாக தமிழ் தேசிய இனத்தால் பார்க்கப்படுகிறது. குறித்த விகாரைக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் பொலிசார் நீதிமன்றங்களை பிழையாக வழிநடத்த முற்படுவதுடன், பொலிசார் நடந்து கொள்ளும் விதமும் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.
கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உட்பட 5 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட விடயம் ஜனநாயக போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க முயலும் ஒரு செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

இவ்வாறான பொலிசாரின் செயற்பாடுகள் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இச் செயற்பட்டை கண்டித்து கடந்த போயா தினத்தன்று தையிட்டி விகாரை முன்பாக பாரியளவிலான போராட்டம் ஒன்று முன்னெடுக்பபட்டிருந்தது.
அதில் பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் அளவில் கலந்து கொண்ட நிலையில் அது பெரும் மக்கள் எழுச்சிப் போராட்டமாக மாறியிருந்தது. அத்துடன் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின் முன்பாகவும் அதே தினத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்பட்டிருந்தது.
தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தில் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி அன்று மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அப்போராட்டம் இடம்பெற்று இருந்தது.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தமிழ் மக்களுக்கு நீதி
அத்துடன், போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் கையெழுத்துடன் இது தொடர்பான மனு ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில், காணி உரிமையாளர்களும், குறித்த ஒரு கட்சியினரும் தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில் அதனை பொலிசார் அடக்க முற்பட்டமை அல்லது பொலிசார் நடந்து கொண்ட முறையே அப் போராட்டம் மககள் எழுச்சி போராட்டாக மாற்றமடைய வழிவகுத்தது.
இன, மத ரீதியிலான விவகாரங்களை அரசாங்கம் மட்டுமல்ல அவர்கள் கீழ் உள்ள திணைக்களங்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகளும் பொறுப்புடன் கையாள வேண்டியது அவசியமானது.

குறித்த விகாரைக்கு எதிரான போராட்டம் தீவிரம் பெற்றுள்ள நிலையில் நாகதீப விகாராதிபதி அங்கு சென்று பார்வையிட்டு மக்கள் ஆறுதல் அடையும் வகையில் கருத்துக்களை கூறியிருந்தார்.
இதன் பின்னர் திஸ்ஸ விகாரை விகாராதிபதியும் புதிய கட்டுமானங்கள் இடம்பெறாது எனவும், அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு இணக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.நீதி அமைச்சரும் இந்த விடயத்திற்கு தீர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன, மத முரண்பாடு ஏற்படாத வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க அரசாங்கம் குறித்த விடயத்தை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.