இலங்கையில் வரவுள்ள புதிய முறைமை: இரத்துச் செய்யப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள் - அமைச்சர் அறிவிப்பு
வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய 'புள்ளிகள் குறைப்பு முறைமை' விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளைத் தொடர்ச்சியாக மீறுபவர்களின் சாரதி உரிமம் மற்றும் பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யக்கூடிய வகையில் இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
புதிய முறைமை
மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள முறையில், வாகன சாரதிகள் அபராதம் செலுத்தினாலும் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்கின்றனர். குறிப்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஒரு சாரதி தண்டிக்கப்படும்போது மற்றொரு சாரதியை நியமிக்கின்றனர்.
ஆனால் அவரும் அதே தவறுகளை இழைக்கிறார். இதனைத் தடுக்கவே புதிய முறைமை கொண்டுவரப்படுகிறது. அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் புள்ளிகள் குறைக்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் புள்ளிகள் குறைந்தால், அவர்களது சாரதி உரிமம் மற்றும் பேருந்து வீதி அனுமதிப்பத்திரம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படும். இலங்கையில் 53 சதவீதமான விபத்துக்கள் சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தையினாலேயே ஏற்படுகின்றன.
பாதுகாப்பின் அடிப்படையில் தவறான செயல்
பிள்ளைகளை மடியில் அமரவைத்துக் கொண்டு வாகனம் ஓட்டும் பழக்கத்தைத் தடுக்கச் சட்டம் கொண்டுவரப்படும். தந்தையர்கள் பிள்ளைகளை மடியில் அமரவைத்து வாகனம் ஓட்டுவது அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பின் அடிப்படையில் அது தவறானது.
எனவே, வாகனம் ஓட்டும் போது பிள்ளைகளை சாரதி ஆசனத்தில் அமரவைப்பதைத் தடுக்கும் சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆசனப் பட்டிகளுக்கான செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்தும் நோக்கில் அவற்றைச் சந்தையில் மறைத்து வைக்கும் மோசடி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |