தையிட்டி திஸ்ஸ விகாரை ஜனவரி 03 அன்று உடைக்கப்படும்...! அர்ச்சுனாவின் அதிரடி அறிவிப்பு
வடக்கில் தமிழ் மக்களை உசுப்போத்தி அவர்களை கொண்டு ஜனவரி 03 ஆம் திகதி தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிப்பதற்கு ஒரு அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
இந்த திட்டத்தின் பின்புலத்தில் செயற்படுவது அநுர அரசாங்கம் தான். ஜனவரி 03ஆம் திகதி பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
முன்னெடுக்கப்படும் பாரிய சூழ்ச்சி
வடக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் யுத்தத்தில் உயிர் நீத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களை குழப்பும் செயற்பாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் கட்சியினர் அடிமட்டத்தில் செயற்பட்டு வருகின்றனர்.
திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் இருந்தால் அவர்களுக்கு வேறு காணி அல்லது பணம் கொடுத்து இந்த பிரச்சினையை தீர்க்குமாறு ஒரு வருடத்திற்கு முன்னர் நான் ஜனாதிபதியிடம் சொன்னேன். அப்போது அவர் அதை ஒத்துக் கொண்டார்.
ஆனால் அவர்களுக்கு இன்று அதை நிறுத்துவதற்கு விருப்பமில்லை. ஏனென்றால் எங்களை புலி என்று சொன்னால் இவர்களுக்கு இலகுவாக அரசியல் செய்து கொள்ளலாம்.
இதை வைத்துக் கொண்டு அவர்களின் பொய்களை மறைத்துக் கொள்ளலாம். அரசியல் பின்புலம் இல்லாமல் இவ்வாறு ஏற்பாடு செய்ய முடியாது.இந்த விகாரையை உடைப்பதற்கு அநுரவின் அரசாங்கம் அல்லது கடந்த அரசாங்கங்கள் தூண்டுவதாகவே தெரிகிறது.
மொட்டு கட்சியின் சரத் வீரசேகரவும் இதற்கு உதவி செய்கிறார். நான் வினயமாக வேண்டிக் கொள்வது என்னவென்றால் இதை நிறுத்த முயற்சிக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.