யாழில் சீவல் தொழிலாளி மீது மதுவரி திணைக்கள அதிகாரிகள் மோசமான தாக்குதல்
யாழ் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று(7) குறித்த நபர் கருத்து தெரிவிக்கையில்,
"கடந்த 04.04.2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கள் இறக்குவதற்காக எனது பகுதிக்கு சென்றிருந்தேன்.
மதுவரி திணைக்கள அதிகாரிகள் மிரட்டல்
திடீரென அங்கு சிவில் உடையில் வந்த பருத்தித்துறை மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேரம் கடந்துவிட்டதாக கூறி மிரட்டினார்கள்.
ஆனால் அப்போது நேரம் 5.40 ஆக இருந்தது அவர்கள் தடுத்துவைத்து என்னை மறித்து 06.00 மணிவரை வைத்திருந்து வழக்கு பதிவு செய்து கையொப்பம் வேண்டினார்கள்.
அதன்பின்பு மதுபானசாலைக்கு செல்லுமாறும் அங்கு அதிகாரிகள் இருப்பதாகவும் கூறினார்கள் அங்கு சென்றதும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் என்னுடைய முகம்,வயிறு,கால் பகுதிகளில் மிக மோசமாக தாக்கினர்.
என்னால் வலி தாங்க முடியவில்லை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வாயில் மோசமாக தாக்கினார்கள் எட்டுபேர் கொண்ட அதிகாரிகள் என்னை விழுத்தி காலால் மிதித்தார்கள்.
உயிருக்கு உத்தரவாதம்
எமது பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் தூண்டுதலில் தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஏன் என்றால் என்னை தாக்குவதற்கு மிகபெரிய தடி ஒன்றை முறித்து எமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அதிகாரிகளிடம் கொடுத்ததை கண்டேன் மயங்கிய நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டேன்.
வலி தாங்க முடியாமல் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின் வீடு திரும்பியுள்ளேன் இதனை வெளியில் கூறவேண்டாமென கூறினார்கள் அவ்வாறு கூறினால் மீண்டும் தாக்குவோம் என மிரட்டினார்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடளித்துள்ளேன்.
எனது உயிருக்கு ஏதாவது நடந்தால் இவர்களே பொறுப்பு எமது பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே தனிப்பட்ட பிரச்சனைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மதுவரித்திணைக்கள அதிகாரிகளை கொண்டு என்னை மோசமாக தாக்கியுள்ளார்.
எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.