தன்னிச்சையாக செயற்படும் சுமந்திரன்! தவராசா சீற்றம்
சுமந்திரனின் நடவடிக்கையை எதிர்க்கும் தவராசா ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னிச்சையாக சென்று கலந்துரையாடியிருக்கிறார். இது வரவேற்கத்தக்க விடயம் அல்ல. என்ன பேசுவது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் பேச வேண்டும் என சட்டத்தரணி தவராசா தெரிவித்தார்.
இன்று “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தன்னிச்சையான சுமந்திரனின் செயற்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியினுடைய பேச்சாளராக இருந்தால் கட்சி எடுக்கும் முடிவுகளை தான் பேச வேண்டும், அவர் பேசி விட்டு வந்து கட்சிக்குள் உள்வாங்குவது இல்லை.
ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னிச்சையாக சென்று கலந்துரையாடியிருக்கிறார்.
இது வரவேற்கத்தக்க விடயம் அல்ல. என்ன பேசுவது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் பேச வேண்டும்.
எங்கள் தமிழ் தலைமைத்துவத்தின் பெரிய பலவீனம், பிரிந்து செல்வது தான். நாங்கள் ஒற்றுமையாக ஒரே நோக்கத்திற்காக செயற்பட வேண்டும். ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தால் என்ன பேச போகிறோம் என்று எங்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும்.
கால வரையின்றி ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட கூடாது. அதில் எந்த பிரயோசனமும் இல்லை. கட்சி வேறுபாடின்றி சமூகம் சார்ந்து, மக்கள் சார்ந்து ஒரு கருத்தோடு ஒருமித்து எங்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதை கொண்டு செல்வதே காலத்தின் கட்டாயம். காலம் பொன் போன்றது.- என்றார்.