உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும்
நடந்து முடிந்த இலங்கையின் உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் தாயகத்தின் தேர்தல் முடிவுகள் என்பிபி அரசாங்கத்தின் முகமூடியை கிழித்து இருக்கிறது.
தமிழ் மக்களை மாயா ஜால வார்த்தைகளினால் ஏமாற்றிவிட முடியாது. போலியான இன சமத்துவம் பேசி இனிமேலும் ஏமாற்ற முடியாது என்பதை மீண்டும் உரக்கச் சொல்லி இருக்கிறறார்கள்.
வடக்கில் தோற்கடிக்கப்பட்டமை மட்டுமல்ல எந்த ஒரு உள்ளூராட்சி சபைகளிலும் என் பி பி அரசாங்கம் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
சில மாவட்டங்களில் அவர்கள் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வாக்குகளை பெற்றிருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆயினும் இப்போது தமிழ் மக்கள் வேண்டுவது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை உள்ளடக்கிய பிராந்திய சுயாட்சி அதிகாரத்தையே என்பதை தமது வாக்குகளால் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
செயற்கையாக உருவாக்கப்பட்ட அநுர அலை
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட அநுர அலை இப்போது உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் தாயகத்தில் அடித்து நொருக்கப்பட்டு விட்டது.
தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை இறுகப் பற்றியிருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
கடந்த பொதுத் தேர்தலுக்கும், உள்ளூராட்சி தேர்தலுக்கும் இடையிலான சில மாதங்களில் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்பட்ட மாற்றமும், தேர்தலில் எடுத்த முடிவுகளும் வித்தியாசமானவை.
இரண்டு தேர்தலிலும் தமிழ் மக்கள் அளித்த வாக்குகளும் தேர்தல் மனநிலையும் மாறுபட்டு இருக்கின்றன. இதற்கான காரண காரியங்கள் என்ன? இத்தகைய மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தது என்பதை பற்றி ஆராய்வது மிக அவசியமானது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் புத்திஜீவிகளும் ஊடகவியலாளர்களும் தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாட்டையும், தமிழ் தேசியத்தையும் வலியுறுத்துவதற்கு தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கொள்கை ரீதியான முடிவை வெளியிட்டனர்.
அதனை செயல்வடிவமாக்க சிவில் சமூகங்கள் இணைந்து ஒரு பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்தினர். ஆயினும் தமிழ் தேசியம் பேசுகின்ற தமிழரசு கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவை எதிர்த்தனர்.
காங்கிரஸ் கட்சி தேர்தலை பகிஷ்கரிப்பது என முடிவெடுத்து பொது வேட்பாளருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தது. அதே நேரத்தில் தமிழரசு கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிந்து நின்று ஒரு அணியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நிற்க தமிழரசு கட்சியின் மத்திய குழுவும் தமிழரசு கட்சியை கையகப்படுத்தி இருக்கும் ஒரு கூட்டமும் சிங்கள தேசியவாதியான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்தனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற பிரதான மூன்று கட்சிகளும் மூன்று நிலைப்பாட்டில் இருந்த போதிலும் பொது வேட்பாளருக்கான ஆதரவு கிடைக்கத்தான் செய்தது. ஆயினும் தமிழ் தேசியம் பேசி பேசுகின்ற பிரதான இரண்டு கட்சிகளும் ஆதரவளித்திருந்தால் அன்று தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பால் நிற்கின்றார்கள் என்பது உலகிற்கு பறைசாற்றப்பட்டிருக்கும்.
பொதுத்தேர்தலில் தமிழரசும், தமிழ் காங்கிஸ்சும் தோல்வி அடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற பிரதான இரண்டு கட்சிகளும் தமிழ் தேசியத்துக்கு எதிரான நிலையில் இருந்து கொண்டு தமிழ் தேசியவாதிகள் என்று கூக்குரல் இட்டனர். முதலைக்கண்ணீர் வடித்தனர்.
இங்கே அரச அறிவியல் அறிவு அற்றவர்களும், சட்டத்தரணிகளாக காட்டிக் கொள்ளும் சட்டப் பயங்கரவாதிகளும், கட்சிகளுக்குள் பின் கதவால் நுழைந்தவர்களும் தமது நலனுக்காக தமிழ் தேசியம் பேசுபவர்கள் என பலதரப்பட்டவர்கள் தமிழ் மக்களின் அரசியலில் முன்னிலைக்கு வந்து தமிழ் தேசியத்தை சிதைக்கும் அடாவடிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் தமிழ் மக்கள் தமிழ அரசியல் தலைமைகள் மீது பெரும் வெறுப்பைக் கொண்டிருந்தனர்.
ஆயினும் அவர்கள் செல்வதற்கு வேறுவழி இல்லாமையினால் பலர் கட்சிகளுடன் நிற்க வேண்டிய துப்பாக்கிய நிலையிலும் இருந்தனர்.
இந்நிலையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
தமிழர்களைக் கொண்டு தமிழர்களை அழிக்கும்...
தமிழரசு கட்சியிலிருந்து பல மூத்த தலைவர்களும் முன்னணி செயற்பாட்டாளர்களும் வெளியேறி புதிய கட்சிகளை உருவாக்க வேண்டிய சூழலை தோற்றுவித்தது.
இத்தகைய தமிழ் தலைமைகள் மீதான வெறுப்பு அடுத்து வந்த பொதுத் தேர்தலில் வீசிய அநுர அலையின்பால் ஈர்க்கப்பட்டு என் பி பி கட்சிக்கு வாக்களிக்கின்ற துப்பாக்கிய நிலையை தமிழ் மக்களுக்கு தோற்றுவித்தது.
இதனால் வடக்கில் என்பிபி கட்சி பெரு வெற்றி பெற்றது என்று சொல்ல வேண்டும். அந்த வெற்றி என்பது விகிதாசார தேர்தல் முறையின் மூலம் சிங்கள தேசியக் கட்சி அதிகூடிய ஆசனங்களை வழங்கியும் விட்டது என்பதையும் கருத்துக் கொள்ள வேண்டும்.
ஆயினும் வடக்கில் என் பி பி கட்சிக்கு கிடைத்த வெற்றி என்பது தமிழ் மக்கள் தமிழ் தலைமைகள் மீது கொண்ட வெறுப்பினால் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவும், அவர்களுக்கு ஒரு தண்டனை வழங்குவதற்காகவுமே என்பிபி கட்சிக்கு வாக்களித்தனர்.
வடக்கில் கிடைத்த வெற்றியை பயன்படுத்தி தமிழின அழிப்பை அரசியல் ரீதியாக கத்தி இரத்தமின்றி சத்தமின்றி மேற்கொள்ள திட்டமிட்டது. அதற்கு இனசமத்துவம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் என் பி பி கட்சி பெற்ற வெற்றிக்கு பின்னர் தமிழர்களைக் கொண்டு தமிழர்களை அழிக்கும் அரசியல் மூலோதயத்தை என் பி பி கையாண்டது.
அது என்னவெனில் ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்றும், அவர்களுக்கான ஒரு தாயகம் இல்லை என்றும், அவர்களுக்கென்று ஒரு தனியான நிர்வாக அலகோ அல்லது ஆட்சி உரிமையோ தேவையில்லை என்றும், இப்போது அனைவருக்கும் தேவை பொருளாதார அபிவிருத்தி மட்டுமே என்றும், இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒரினம், ஒரு மக்கள் என்றும், தமிழர்களும் சிங்களவரும் ஒரே இலங்கையர்கள் என்ற இனசமத்துவத்தை என்பிபி அரசாங்கம் பேசியது.
அதை ஒரு பெரும் பிரசார உத்தியாக தமிழர் தாயகத்தில் கையாண்டது. அந்த இனசமத்துவ மாயைக்குள்ளால் தமிழின அழிப்பை கருத்தியல் ரீதியாக முன்னெடுக முனைந்தது.
இந்த முன்னெடுப்பை அவர்கள் குறிப்பிட்ட தூரம் முன்னேறியும் இருந்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இந்தப் பின்னணியில் தேர்தலின் பெற்ற வெற்றியை இனச் சமத்துவத்தை பேசி, ஊழல் ஒழிப்பு, கிளீன் ஸ்ரீலங்கா என்ற முழக்கத்துடன் உள்ளூராட்சி தேர்தலில் ""நாடும் அநுரவோடு ஊரும் அநுரவோடு"" என்ற கோஷத்தை முன் வைத்தனர்.
இந்த நிலையில் தமிழர் தரப்பின் பிரதான கட்சியான தமிழரசு கட்சி ""நாடு அநுரவோடு இருக்கட்டும் ஊர் நம்மோடு இருக்கட்டும்"" என்ற முற்றிலும் அபத்தமான, அறிவீனமான, தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்ற அல்லது மறுதலிக்கின்ற ஒரு கொள்கையை முன் வைத்தனர்.
தமிழரசு கட்சியினர் நின்று பிடிக்க முடியாமல்..
தம்மை சமஷ்டிக் கட்சி என்று கூறிக் கொள்ளும் இவர்கள் ஒற்றை ஆட்சி என்றும் ஒருமித்த நாடு என்றும் பொருள் பொதிந்த மிக அபத்தமான ஒரு கொள்கையை முன் வைத்ததற்கு எதிராக புலம்பெயர் தமிழ் புத்திஜீவிகள் சிலர் மிகக் கடுமையாக எதிர்த்து தமது கருத்தியலை முன்வைத்தனர்.
அந்தக் கருத்தியலுக்கு முன்னே தமிழரசு கட்சியினர் நின்று பிடிக்க முடியாமல் அந்தக் கோஷத்தை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் தமிழரசு கட்சியின் ஒரு பகுதியினர் குறிப்பாக கிளிநொச்சியை மையப்படுத்தி சிறீதரன் தலைமையில் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற திம்பு கோட்பாட்டை வலியுறுத்தும் வகையிலான கோஷத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டனர்.
இதனால் வடகிழக்கில் கிளிநொச்சி மாவட்டம் தமிழரசு கட்சிக்கு அதிகூடிய ஆசனங்களை பெற்ற பெற்றுக் கொடுத்த மாவட்டமாக பதிவாகியுள்ளது.
மேற்படி கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ் தமிழரசு கட்சியின் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை பண்ற கோஷத்தின் மூலம் கிடைத்த பெருவெற்றி என்பது தமிழ் மக்கள் எப்போதும் கொள்கையின்பால் நின்றவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
எஸ்.ஜே.வி.செல்வநாயகன் அவர்களின் சமஸ்டிக் கொள்கைக்கு பின்னே தமிழ் மக்கள் நின்றார்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கிய வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற கொள்கைக்கு பின்னே மக்கள் அணி திரண்டார்கள்.
அதனூடாகவே தனிநாடு என்ற கொள்கைக்காக ஆயுதப் போராட்டத்தின் பின்னே நின்றார்கள்.
ஆயுதப் போராட்டத்தில் முதலாவது தீர்வு திட்டமாக முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாட்டை முன்னிறுத்தி தொடர்ந்து தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பின்னே நின்றார்கள்.
அதனை பின்பற்றியே தமிழ் தேசியம் என்று அந்த ஒற்றைக் கொள்கைக்குள் அடங்குகின்ற தேசியம் தாயகம் தன்னாட்சி உரிமை என்ற கொள்கையின்பால் இன்றும் நிற்கிறார்கள்.
இதனை தமிழ் கட்சிகள் இனிவரும் காலத்திலாவது கருத்து எடுக்க வேண்டும். அடுத்ததாக தமிழ் மக்கள் எப்போதும் உள்ளக முரண்களை விரும்பாதவர்கள். தமிழ் புத்திஜீவிகள் வலியுறுத்தும் ““கட்சிகளின் ஐக்கியத்தை““ தமிழ் மக்கள் பெரிதும் விரும்புகின்றார்கள்.
அதுவே தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்கான ஒரே ஒரு வழி என்பதையும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.
இந்த அடிப்படையில்தான் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் காங்கிரஸ் உடன் சில கட்சிகள் இணைந்து ஒரு கூட்டு முன்னணிக்கு வந்தன.
அதேபோன்று ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணி என்ற இன்னுமொரு கட்சி தோற்றம் பெற்றது. இவ்விரண்டு அணியினரும் இந்த தேர்தலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வாக்குகளை பெற்றிருக்கிறார்கள் என்பதிலிருந்து தமிழ் மக்கள் ஐக்கியத்தை வேண்டி நிற்கிறார்கள் என்பது தெரிகிறது.
தமது சுயநல நலன்களுக்காக என் பி பி கட்சியுடன்
இந்தத் தேர்தலில் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் ஐக்கியத்துக்கு வந்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும். அது சாத்தியப்படாவிட்டால் குறைந்தபட்சம் போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்காவது வந்து தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் ஒன்று குவித்து தமிழ்த் தேசியத்தை நிலை நாட்ட வேண்டும்.
இல்லையேல் தமிழ் மக்களின் வாக்கு சிதறடிக்கப்பட்டு இந்தத் தேர்தலிலும் என் பி பி வெற்றி பெற்றால் தமிழ் மக்களுக்கு பிரச்சினை ஒன்று இல்லை என்றும் தமிழ் மக்களுடைய பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமே என்றும் சர்வதேச பிரசாரங்களை மேற்கொண்டு தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் சேற்றுக்குள் புதைத்து விடுவார்கள் என புலம்பெயர் தமிழ் புத்திஜீவிகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தாயகத்தில் வாழ்கின்ற சில புத்திஜீவிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமது அறிவார்ந்த கருத்தியல் நிலைப்பாட்டை பலமாக முன்வைத்தனர்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 15 க்கு மேற்பட்ட விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் தமது சுயநல நலன்களுக்காக என் பி பி கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியத்தை சிதைக்க கங்கணம் கட்டி நின்றனர்.
அவ்வேளையில் தேசியத்தின்பால் நின்று கொண்டு தமது பதவிகள் பட்டங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி கருத்துக்களை வெளியிட்ட கல்விமான்களையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வாறே யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் பல்கலைக்கழகத்தில் இரண்டுபட்டிருக்கும் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் தமது கல்வி கற்கைக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களையும் பின்விளைவுகளையும் பொருட்படுத்தாது தமிழ் தேசியத்தின்பால் நின்று தமது கருத்துக்களையும் அறிக்கைகளையும் விடுத்து முன்நிற்க தயங்கவில்லை என்பதையும் இங்கே கருத்துக் கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்தமை என்பது கட்சிகளுடைய தனிப்பட்ட செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழ் தேசியம் என்ற கருத்து நிலையில் இருந்து கொண்டு சில புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும் குறுகிய ஓரிரு மாதங்களில் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்த தமிழ் தேசிய பாதுகாப்பு கருத்தியலின் பலமும் ஆழமும்தான் காரணமாக அமைந்தது.
எம்பிபி அரசினுடைய இனமயமாக்கல் கொள்கை என்று தமிழ் புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்பிபி என்ற முகமூடி அணிந்த ஜேவிபியினுடைய இனமயமாக்கல் ideological நிலைப்பாட்டை அதாவது இலங்கை தீவை சிங்கள மயமாக்கும் சித்தாந்தத்தை(Ideology) அல்லது கருத்தியலை பலமாக எதிர்த்தனர்.
இதனை உள்ளூராட்சி தேர்தல் காலங்களில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ் தேசியக் கருத்தியலை வலியுறுத்தி தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாரதூரமான அழிவை தடுப்பதற்கான தமது உயர்ந்த பட்ச கொள்கை முன்மொழிவுகளை முன் வைத்ததன் மூலம் தமிழ் மக்களை விழிப்படையச் செய்தனர் என்றால் மிகையில்லை.
இன்று தமிழர் தாயகத்தில் ஜேவிபி இன சமத்துவ மாயையை சுக்கு நூறாக உடைந்து விட்டது.
இவ்வாறு உடைத்தெறிந்ததில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழ்கின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரு சில ஊடகங்களும் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன என்பதுதான் தத்துவார்த்த உண்மையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 15 May, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
