கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் விபத்து:5 பேர் பலி
ஆபிரிக்காவின் உயரமான மலையாகக் கருதப்படும் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தான்சானியா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கிளிமஞ்சாரோ மலையில் உள்ள பராஃபு முகாம் (Barafu Camp) அருகே இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர், மருத்துவ மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக கிளிமஞ்சாரோ பிராந்திய பொலிஸ் பிரிவு தலைவர் சைமன் மேக்வா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒரு மலை வழிகாட்டி, ஒரு மருத்துவர், ஒரு விமானி, மற்றும் இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர். எனினும், அந்த சுற்றுலாப் பயணிகளின் தேசியத்துவம் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆபிரிக்காவின் உயரமான மலைச் சிகரமாக விளங்கும் கிளிமஞ்சாரோ, கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 மீட்டர் (20,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த விபத்து 4,670 முதல் 4,700 மீட்டர் உயரப்பகுதியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 சுற்றுலாப் பயணிகள் கிளிமஞ்சாரோ மலையை ஏறிச் செல்லுகின்றனர் எனவும் குறிப்பிடப்படுகிறது.