சீனாவை பகைமை சக்தியாக தமிழர்கள் பார்க்கக்கூடாது - சபா குகதாஸ் தெரிவிப்பு
இலங்கை அரசாங்கத்தின் நேச நாடுகளைத் தமிழர்கள் ஒரு போதும் பகைச் சக்திகளாகப் பார்க்கக்கூடாது. அவ்வாறு நினைத்தால் நீண்டகால அடிப்படையில் தமிழர்களுக்கு மிகப் பலவீனமாக அமையும்.
அந்த வகையில் தான் சீனா தொடர்பான விடயத்திலும் மிகவும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சீனா தமிழர் தாயகப்பகுதியில் வருகை தருவதன் இராஜதந்திரத்தைச் சிங்கள ஆட்சியாளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை ஆய்வு செய்யாமல் எய்தவன் இருக்க அம்பை நோகும் நிலையில் சில தமிழ் அரசியல்வாதிகள் சீனாவுக்கு நிலங்களைக் குத்தகைக்குக் கொடுக்க தயாராகிறது.
இதனை செய்கின்ற இலங்கை அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதை விட்டு சீனாவைப் பார்த்து நீங்கள் தமிழர் தாயகத்திற்குள் வர வேண்டாம் , தமிழர்களுக்கு என்ன தீர்வு தருவீர்கள் என்ற சிறு பிள்ளைத்தனமான கேள்விகளைக் கேட்பது தமிழர்களின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஆரோக்கியமாக இல்லை.
சீனா தமிழர்களுக்கு என்ன தீர்வு தருவார்கள் என்று கேட்பதற்கு முன் தமிழர் தரப்பு என்ன கோரிக்கையைச் சீனாவிடம் முன்வைத்தீர்கள் என்ற கேள்விக்குப் பதில் என்ன?
சீனாவின் மனிதவுரிமை விவகாரங்கள் கேள்விக்குரியதாக இருப்பது உண்மை. ஆனால் இன்று உலகில் சீனாவின் பகை சக்தியாகப் பேசப்படும் இந்தியா , அமெரிக்கா போன்ற நாடுகள் பெருமளவு வர்த்தக உறவுகளைச் சீனாவுடன் பேணிக் கொண்டுதானே உள்ளன.
அத்துடன் அண்மையில் அமெரிக்காவிற்கே டொலர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம் அதனை நிவர்த்தி செய்யச் சீனாவிடமே டொலரினைக் கடனாகப் பெற அமெரிக்கா தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. காரணம் இன்று உலகில் அதி கூடிய டொலர் கையிருப்பு சீனாவிடம் தான் உள்ளது.
அவர்களிடம் 4.5 ட்ரில்லியன் உள்ளதாம். சீனாவைப் பகைமைச் சக்தியாக வெளிப்படையாக விமர்சித்தல் தமிழர்களுக்கு இராஜதந்திர பின்னடைவாகவே அமையும். குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் மிக நெருங்கிய சுப்பப் பவர் நாடுகளைத் தமிழர் தரப்பும் நெருங்கி உறவாடும் தந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
அதுவே இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான வெளிநாடுகளின் ஆதரவுத் தளத்தைப் பலவீனப்படுத்தும். இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு ஒரு வர்த்தக நகரத்தைத் தனது இறைமைக்கு அப்பால் வழங்கியுள்ளது அத்துடன் பல இடங்களை 99 வருடக் குத்தகைக்கு வழங்கியுள்ளது.
சீனாவிடம் பெற்ற கடன்கள் மீளக் கொடுக்க குறைந்தது இருபது தலைவர்களின் ஆட்சிக்காலம் எடுக்கும் அதாவது நூறு வருடங்கள் தேவை. அவ்வாறாயின் சீனாவுடன் எந்த ஆட்சியாளர் வந்தாலும் இணைந்து பயணிக்க வேண்டும்.
இதன் பின்னணியில் சீனாவைத்
தமிழர் தரப்பு பகைமைச் சக்தியாகப் பார்ப்பது ஈழத் தமிழர்களின் அரசியல்
இருப்பிற்கு ஆரோக்கியமானதாக இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.