நீதி நியாயத்தை நிலைநிறுத்த தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!
சுகிர்தராஜனை அழித்ததன் ஊடாக தமிழ் பேசும் இனத்தின் உரிமையை அழித்துவிடாலம் என்று நினைக்கின்றார்கள், எனவே அவருடைய இலட்சியத்தினை வென்றெடுப்பதற்காவும் இந்த நாட்டிலே நீதி நியாயத்தை நிறுத்தக்கூடிய வகையிலே தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழர் மீது தொடுக்கப்பட்டு அடக்கப்பட்டு இருக்கின்ற விடயங்களை தொடராக கொண்டுபோக வேண்டும் என்ற நோக்கோடு இந்த அரசின் செயற்பாடுகளை பேணா மூலம் வெளியுலகிற்கு கொண்டுவருகின்ற சக்திகளான ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அழிக்கின்ற செயற்பாடு மற்றும் நீதி மறுதலிக்கப்படுவதும் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுவதும் தொடராக இருந்து கொண்டிருக்கின்றது.
சுகிர்தராஜன் மட்டக்களப்பு மண்ணிலே பிறந்திருந்தாலும் அம்பாறையில் என்னோடு நெருக்கமாக பழகியவர். எல்லைக் கிராமங்களிலே கற்பித்தல் விடயங்களில் கூட எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியாளராகவும் சிறந்த அறிவிப்பாளராகவும் திகழ்ந்தவர்.
இவ்வாறான ஒருவர் திருகோணமலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என அறிந்து மனவேதனை அடைந்தோம்.
வடகிழக்கு பிரதேசங்களில் தமிழர்கள் தங்களுடைய சுயநிர்ணய அடிப்படையிலே வாழமுடியாது சுதந்திரமான அரசியலை செய்ய முடியாது அவர்கள் துன்புறுத்தப்பட வேண்டும். வடகிழக்கு பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்ற நிகழ்சி நிரலில் நாட்டில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் முன்னெடுப்புக்களுக்கு இந்த ஊடகவியலாளர்கள் தடையாக இருப்பது ஒரு சவாலான விடயமாக இருந்தது.
ஊடகவியலாளர் மாத்திரமல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த எமது உறுப்பினர்கள் சமூகத்தின் மீது பற்றுறுதி கொண்டு செயற்பட்ட பல தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள் .
எங்களுடைய சமூகம் ஓரளவு பாதுகாப்பாக இருக்கின்றது என்றால் நடந்த விடயங்கள் அனைத்தும் சர்வதேச ரீதியாக பார்க்க கூடியதை இந்த ஊடகம் செய்தது. இப்போது எம்மை கூறு போடுகின்ற நிலமை நடந்து கொண்டிருக்கின்றது. பிரதேசவாதம் தலைதூக்கி ஆடுகின்றது, இந்த நிலமை அதிகரிக்குமானால் இந்த நாட்டிலே தமிழர்கள் இல்லை என்ற நிலமை தோன்றி தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்ற வரலாறு மட்டுமே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.