தமிழ் பேசும் கட்சிகளின் இணைவின் பின்னணியில் இந்தியாவா?
இலங்கை தமிழர்களின் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கங்களின் பொறுப்புக்கூறலில் நம்பிக்கையின்மை தொடர்கின்றது.
எனவே தீர்வு விடயத்தில் மூன்றாம் தரப்பு ஒன்றின் அவசியத்தை தமிழ்தரப்புக்கள் எப்போதும் வலியுறுத்தி வருவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதிலும் தமிழர் தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பை நிராகரிக்கமுடியாது.
எனவே இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் சட்டமாக்கப்பட்டுள்ள 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதை ஏற்கனவே தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
எனினும் அதனை இல்லாமல் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுமானால், அது தமிழ்பேசும் மக்களுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும்.
ஆகவே இலங்கையில் உள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு தமிழ் முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்கவுள்ளன.
இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 21ஆம் திகதியன்று கொழும்பில் தமிழ் பேசும் கட்சிகளால் கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்
இதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் இந்த முயற்சியில் இந்தியாவின் பின்னணி இருக்கலாம் என்ற சிலரின் சந்தேகத்தை அவர் நிராகரித்துள்ளார்.