லண்டன் வாழ் தமிழர்கள் தொழில்களை இழக்கும் ஆபத்து
பிரித்தானிய தலைநகர் லண்டன் முழுவதும் ஒமிக்ரோன் மாறுபாட்டிற்குள்ளாகிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மில்லியன் கணக்கான மக்கள் தொழில்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் லண்டன் மேயர் சாதிக் கான் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோட்டல்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் கலாச்சார நிலையங்களுக்கு உடனடி ஆதரவை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் உடனடியாக உதவவில்லை என்றால் மில்லியன் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
லண்டனில் இந்த தொழில்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் தொழில்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக லண்டன் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
நேரம் வேகமாக சென்றுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் உடனடியாக செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். தலைநகர் மக்கள் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். லண்டனில் அனைத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்காக காத்திருந்த மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்தித்து செயற்பட அரசாங்கம் முனவர வேண்டும் என லண்டன் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் பண்டிகை காலத்தை நம்பியிருக்கும் புகழ்பெற்ற சில்லறை வர்த்தகங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா இடங்கள் ஒமிக்ரோன் பரவலால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளமையினால் மக்கள் வாழ்வாதாரத்தையும் தங்கள் தொழில்களையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிலைமை மில்லியன் கணக்கான மக்களை நீண்ட காலங்களுக்கு தொழிலை இழக்கும் நிலைக்கு தள்ளும் என மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் வர்த்தகங்களுக்கு உதவுவதற்கும், அடுத்த ஆண்டு மீண்டும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அவர்கள் உதவுவதை உறுதிசெய்யமாறு பிரித்தானிய சான்ஸ்லரிடம் தான் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் அதிகவான தமிழர்கள் சில்லறை வர்த்தகங்கள், ஹோட்டல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.