தம்மை தகவமைக்க தவறும் தமிழினம்
ஈழத் தமிழ்த் தேசிய இனம் இழந்து போன இறைமையை மீட்பதற்காக மூன்று நூற்றாண்டைக் கடந்து போராடியும் தொடர்ந்து தோல்விகளையே மலையாக குவித்து வருகிறது.
காலனித்துவத்திடம் இருந்து இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற பின்னர் சிங்கள அரசிடமிருந்து ஈழத் தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அஹிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் 60 வருடங்களுக்கு மேலாக போராடி இரண்டு வழிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்தது.
ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் 2009இல் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சர்வதேச என்றும், ஐ.நா என்றும் அவர்களுக்க பின்னே ஓடி பதினாறு வருடங்களை கடத்தி இன்று ஐ.நாவும் ஏமாற்றிவிட்டது என்று நாம் புலம்புகிறோம்.
தமிழினம்
இந்த ஒப்பாரிகளும், புலம்பல்களும், விண்ணப்பங்களும் நீதியைப் பெற்றுத் தராது. தோல்விக்கான காரணங்களை கண்டறியாமல், ஈழத் தமிழர் உடைய பிரச்சினையை தத்துவார்த்த கண்ணோட்டத்தில் அணுகாமல் விடுதலைக்கான பாதையின் திறவுகோலை கண்டறிய முடியாது.
தோல்விகளுக்கான காரணங்களை கண்டறியாமல் தொடர்ந்து நாம் பயணிப்பது தோல்வியை மீண்டும் மீண்டும் அரவணைப்பதற்கே. அதே நேரத்தில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழினம் தன்னை தற்காத்துக் கொள்வது மிக அவசியமானது.
இருக்கின்ற நிலைமைகளுக்கேற்ப அந்த நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தகவமைத்து அந்தச் சூழலில் நிலைத்து வாழ்வதன் மூலமே ஒரு தேசிய இனம் அது தாயகத்தில் நிலைத்திட முடியும். இல்லையேல் இனமும் கரைக்கப்பட்டு, நிலம் விழுங்கப்பட்டு இந்த பூமிப் பந்தில் ஈழத் தமிழினம் அற்றுப் போய்விடும்.
இந்த இடத்தில் சால்ஸ் டார்வினின் பரிணாமவாத கோட்பாடட்டில்(Evolutionary theory) இருந்து ஈழத் தமிழர்களுடைய இருப்பை தக்க வைப்பதற்கான தத்துவார்த்த அறிவையும், விளக்கத்தை தேட முடியும். டார்வின் இயற்கைத் தேர்வின் (Natural selection) மூலம், தக்கன பிழைக்கும் தகாதென அழிந்துவிடும் என்கிறார்.
இயற்கைச் சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைக்கும் பண்புகளை உடையவர்கள் (fitness) தான் தொடர்ந்து வாழ்ந்து இனப்பெருக்கம் செய்வார்கள் என்கிறார். இது அரசற்ற கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உட்பட்டிருக்கும் தமிழினத்திற்கு மிகவும் பொருத்தமான தத்துவார்த்த கோட்பாடாகும்.
டார்வின் “only the fit (சூழலுக்கு ஏற்றவர்கள்) will survive.” என்று தனது கோட்பாட்டில் குறிப்பிட்டார். அதனை அடியொட்டியதாக இந்தப் பொருளை மேலும் விளக்க ஹாபோட் ஸ்பென்சர் (Herbert Spencer) சுருக்கமாக தக்கன பிழைக்கும் என்பதை“survival of the fittest” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கோட்பாடு
இங்கே “fitness” என்பது சக்தி அல்லது வலிமை மட்டும் குறிப்பிடவில்லை சூழலுக்கு ஏற்ப பழகும் திறன், உணவு கிடைக்கும் வழி, பாதுகாப்பு திறன், இனப்பெருக்கம் செய்யும் திறன்.
இவற்றையெல்லாம் கொண்டிருக்கின்ற உயிரி மட்டுமே வாழும் என்பதாகும். மனிதனும் ஒர் உயிரி என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்களும் தமிழர் தாயகத்தில் நிலைத்து தாம்வாழத் தகவமைத்துக் கொள்ள(survival) வேண்டியது அவசியமானது.
சார்ல்ஸ் டார்வின் முன்வைத்த இயற்கைத் தேர்வு (Natural Selection) கோட்பாட்டின் அடிப்படையில் உருவான சமூக டார்வினிஸம்(Social Darwinism) மனித சமுதாயத்தில் “ சூழலுக்கு வியந்து தம்மை தகவமைத்து வலுப்படுத்துபவர்கள் மட்டுமே நிலைத்து வாழ முடியும் என்ற உண்மையை ஈழத் தமிழர்களுக்கு போதிக்கிறது.
இதன் அரசியல் வடிவமே அரச டார்வினிஸம்(State Darwinism) இதனை தமிழ் மக்கள் தமது இறைமையை மீட்பதற்கான கோட்பாட்டு தளத்தில் வைத்து பார்ப்பதும் செயற்படுத்துவதும் பின்பற்றுவதும் அவசியமாகும்.
ஈழத் தமிழர்கள் அரசாக சிந்தித்து தேசியமாக செயல்படுவதையே மேற்படி கோட்பாடு உணர்த்து நிற்கிறது. இதனைக் கற்றுக் கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் ஈழத் தமிழர்கள் தமது விடுதலைப் பாதையில் ஒரு அங்குலம்தானும் நகர முடியாது.
இப்போது ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையின் இருப்பு நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இருப்புநிலை என்பது முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழர் தாயகத்தின் அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பல துண்டுகளாக பிரிந்து இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் ஆயுதப் போராட்ட காலத்தில் அமைதியாக இருந்த சுயநல அரசியல் பிராணிகளும் களத்துக்கு வந்துவிட்டது. சிங்கள தேசியக் கட்சிகளும் தமிழர் தாய் நிலத்தில் அரசியலை பலமாக செய்யத் தொடங்கி விட்டன.
மறுபுறம் தமிழர் தாயகத்தில் இருந்து பெருமளவு கல்வி கற்றவர்களும் இளைய சமூகமும் புலம்பெயர் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தாயகத்தின் சமூக நிலை என்பது சத்தற்ற நலிந்த ஒரு சமூகமே தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய சூழல்களை தோற்றுவித்து வருகிறது.
இப்போது தமிழ் ஊடகப் பரப்பில் ஐநா தமிழர்களை ஏமாற்றி விட்டது என்ற செய்தியே பெரிய அளவில் வியாபித்திருக்கிறது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தோல்விக்கு பின் தமிழ்சமூகத்தில் எவ்வாறு ஒரு சோர்வு நிலையும், விரக்தியும் ஏற்பட்டதோ அத்தகைய ஒரு விரக்தி மனப்பான்மை தமிழ் சமூகத்தில் இப்போது வியாபிக்க தொடங்குகிறது.
ஜேவிபி அரசாங்கம்
இது தமிழ் சமூகத்துக்கு ஏற்றதல்ல. இது தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியை எதிரியிடம் சரணடைய வைக்கும், சேவகம் செய்ய வைக்கும், கடைந்தெடுத்த சுயநலம் சார்ந்து சிந்திக்கவும் செயல்படவும் தூண்டும். இது தமிழ் சமூகத்துக்கு மிக ஆபத்தான ஒரு காலகட்டமாக உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆகவே இந்தச் சூழமைவை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தாயகத்தின் கல்விமான்களும், சமூக ஆர்வலர்களும், மதப் பெரியவர்களும், ஊடகவியலாளர்களும் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
அதே நேரத்தில் இவ்வாறான ஒரு கருத்துருவாக்கம் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டு கொண்டு இருக்கையில் சிங்கள தேசம் அதனை மேலும் வலுப்படுத்தக் கூடியவாறு தனக்கு சாதகமாகவும் அரசியல் செய்யத் தொடங்கிவிட்டது.
இப்போது மக்களுக்கான தீர்வு சமஸ்டி அல்லாத பொலிஸ், காணி அதிகாரம் அற்ற, வடக்கு கிழக்கு என்ற மாகாணம் இணைப்பில்லாத, மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடிய ஒரு தீர்வு பற்றிய உரையாடல்கள் சுவிஸ்லாந்து அரச ஆதரவுடன் நடப்பதாக கதைகள் உலாவை விடப்பட்டிருக்கின்றன.
இந்தச் செய்தியில் உண்மை இல்லாமலும் இல்லை ஏனெனில் இதனைத் தான் இன்றைய ஜேவிபி அரசாங்கம் விரும்புகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வாக ஒரு பிராந்திய அலகை அதாவது தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிக இணைப்பு என்ற அடிப்படையில் இணைத்து வட-கிழக்கு மாகாண சபை என்ற ஒரு பிராந்திய நிர்வாக அலகை தீர்வாக தந்திருந்தது.
இந்த நிர்வாக சபையில் அதிகாரங்கள் குறைவானதாக இருக்கலாம். குறைபாடுகள் இருக்கலாம். ஆனாலும் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக சர்வதேச தலையீட்டின் மூலம் ஒரு பிராந்திய நிர்வாக அலகு தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை. அந்தக் குறைபாடுடைய நிர்வாக அலகை தமிழ் மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதில் மிகக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இந்த ஜேவிபியினர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம்
ஆகவே அவர்கள் இப்போது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையின் அரசியல் யாப்பில் உருவாக்கப்பட்ட 13-ஆம் திருத்தச் நீக்குவதன் மூலம் இந்தியாவின் தலையிட்டை நீக்குவதோடு தமிழர்களுக்கான ஒரு பிராந்தி அலகு என்ற நிர்வாகத்தையும் இல்லாதஒழிப்பதை அவர்கள் இப்போது முதல் இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர்.
அந்த இலக்கை அடைவதற்காகதான் இப்போது சுவிஸ் அரச ஆதரவுடன் தீர்வு திட்டம் என்ற கதையை உலாவை விட்டு தமிழ் மக்களின் கடுமையான எதிர்ப்பை தணிப்பதற்கான சூழ்ச்சிகர அரசியலை முன்னெடுக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று இருக்கின்ற சர்வதேச அரசியலில் அவரவர் நலன்களே முக்கியம். இங்கே சிங்கள அரசு தனது நலனை நோக்கிய செயல்படும். அதே நேரத்தில் சர்வதேச நாடுகளும் அவரவர் நலன்களின் அடிப்படையிலேயே தொழிற்படுவர். இப்போது தமிழர்கள் பிரச்சினைக்கான தீர்வு என்பதற்கு அப்பால் தமக்கான நலன்களையே அவரவர் கொண்டுள்ளனர்.
இந்த அடிப்படையில் இந்து சமுத்திர பிராந்திய அரசியலில் தமிழ் மக்கள் வாழும் தாயக நிலப்பரப்பு தவிர்க்க முடியாத நிர்ணயகரமான அமைவிடம் என்ற அடிப்படையில் தமிழர்களை சாந்தப்படுத்தி தமது நலன்களை அடைவதையே மேற்குலகம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இன்று மேற்குலகத்திக்கு இலங்கை தீவு அவசியப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கை தீவின் சிங்கள ஆட்சியாளரை கையாள்வதற்கு தமிழர் தரப்பு அவசியமாக உள்ளது.
தமிழர் பிரச்சினை இல்லையேல் அல்லது ஈழத் தமிழர்கள் இலங்கை தீவில் இல்லையேல் இலங்கையின் சிங்கள பௌத்த அரசு முற்றுமுழுதாக மேற்குலக எதிர்ப்பு அணியில் இணைந்து விடும். ஆனால் ஈழத் தமிழர்கள் மற்றும் அண்டை நாடான இந்தியா என்ற இரண்டினதும் கிடுக்கு பிடிக்கும் இலங்கை அரசு அகப்பட்டு இருக்கிறது.
ஆயினும் அது தன்னை இந்த பிடியிலிருந்து நழுவி செல்வதற்கான ஏராளமான வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்புகளை இல்லாதவழிக்க கூடிய சக்தி தமிழர் தரப்புக்கு உண்டு. இந்திய தரப்புக்கு உண்டு.
ஆயினும் ஈழத் தமிழர்களையும், இந்தியாவையும் ஏமாற்றி தனது பாதையில் முன்னோர்வதற்கான தொழில் சார் ராஜதந்திரக் கட்டமைப்பு இலங்கை அரசிடம் உண்டு. இந்த நிலையில் மேற்குலகத்தினருக்கு தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டு விட்டது என்று சொல்வதற்கு ஒரு தீர்வு திட்டம் தேவையாக உள்ளது.
சுயநிர்ணய உரிமை
அதே நேரத்தில் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் ஈழத் தமிழர்களை தொடர்ந்து இனவழிப்பு செய்து இலங்கைத் தீவை தனிச் சிங்கள பௌத்த நாடாக்குவதற்குமான செயல் திட்டத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு சிங்கள தேசத்திற்கு ஒரு தீர்வும் தேவைப்படுகிறது.
அதே நேரத்தில் இலங்கைத் தீவை தனது செல்வாக்கு மண்டலத்தில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு தமிழர் தொடர்பாக தொடர்ந்து தனது கை இலங்கையில்இருப்பதற்கும் இந்தியாவிற்கு ஒரு தீர்வு திட்டம் தேவையாக உள்ளது.
இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் தமது தாயக நிரப்பரப்பில் நிலைத்து வாழ்வதற்கு தமக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு நிர நிரந்தர அரசியல் தீர்வு தேவையாக உள்ளது. இத்தகைய பல் பரிமாணங்களை கூடாகவே தமிழ் மக்களுக்கான அரசியலும் அரசியல் தீர்வும் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டமும் நகர்ந்து செல்கிறது.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு சரியான தீர்வு திட்டம் ஒன்றை தமிழ் அரசியல் தரப்பினர் முன்வைக்க வேண்டும். அவ்வாறு ஒரு அரசியல் தீர்வு திட்டம் ஒன்றை முன்வைத்து அதற்காக தமிழ் மக்களை ஒன்று திரட்டி போராட வேண்டும்.
இன்றைய நிலையில் ஒரு அரசியல் திருத்தத்தை முன்வைத்து அதை மக்களின் ஆதரவுடன் தாயகத்திலும், புலம்பிரதேசங்களிலும் முன்னெடுக்க தவறுவோமேயானால் வருபவன் போனெல்லாம் ஈழத் தமிழனின் நெத்தியில் நாமத்தை வைத்து விட்டு சென்று விடுவான் என்பதே இன்றைய எதார்த்தம்.
தமிழ் மக்கள் போராடினால் மட்டுமே வாழ்வு இல்லையேல் அழிவே மிஞ்சும். டார்வின் கூற்றுப்படி தக்கனதான் பிழைக்கும் தகாதன அழிந்து விடும். நாம் தக்கவனாக இருந்து தகவமைத்து வாழ்தலே நமக்கான தேசிய அபிலாசை பெற்று தரும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 19 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.




