மாவீரர் தினத்தில் தமிழ் இளைஞர்கள் கைது..! தடை செய்யப்பட்ட அமைப்பை ஊக்குவித்தால் கடும் நடவடிக்கை
மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில், நினைவு நிகழ்வுகளின்போது முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியதற்காகச் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (28.11.2026) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற நினைவு நிகழ்வுகளைப் பொலிஸார் தீவிரமாகக் கண்காணித்துள்ளனர்.
இதற்கமைய, அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்க முடியாது..
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் திலீபனின் உருவப்படங்களைக் காட்சிப்படுத்தியது தொடர்பாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

அதேபோன்று, வடக்கு, கிழக்கு அல்லது தெற்கு என எந்தப் பகுதியில் வசித்தாலும், மக்கள் தங்கள் உறவினர்களை நினைவுகூர்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது.
மேலும், வெளிநாடுகளில் நடைபெற்ற நினைவு நிகழ்வுகளின் பழைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்ற தோற்றத்தில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின் உயர்தர மாணவிக்கு நேர்ந்த அவலம்.. 15 வருடங்களுக்கு பிறகு வெளியான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு