லண்டனில் பொலிஸாரினால் தேடப்படும் தமிழ் இளைஞன்
லண்டனில் பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் தமிழர் ஒருவர் தொடர்பில் பொது மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என லண்டனில் வாழும் மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
35 வயதான பாலசங்கர் நாராயணன் எனப்படும் தமிழர் ஒருவரே தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகிறார். அவர் பல்வேறு குற்ற செயல்களுக்கு தொடர்புப்பட்டவர் என கூறப்படுகின்றது.
கடந்த 7ஆம் திகதி பாலசங்கர் நாராயணன் இல்போர்டில் உள்ள ஒரு பராமரிப்பு நிலையத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலசங்கருக்கு, லண்டன், நியூஹாம், கிரீன்போர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட், இல்போர்ட் மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆகிய இடங்களில் தொடர்புகள் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கிரேய்ஸ் மற்றும் மென்செஸ்டரிலும் தொடர்புப்பட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் தப்பி சென்ற சில மணி நேரங்களிலேயே பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியட்டு பொது மக்களிடம் உதவி கோரும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நபரை கண்டுபிடிக்க தாங்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாலசங்கர் நாராயணன் ஆசிய நாட்டவர் எனவும் 5 அடி 9 அங்குளம் உயரம் கொண்ட நடுத்தர உடலமைப்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அவரை கண்டால் நெருங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதுடன் உடனடியாக 999 எண்ணிற்கு அழைப்பேற்படுத்தி பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.