கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்
கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13ம் திகதி சென்ற நிலையில் குறித்த இளைஞர் மர்மமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
35 வயதான மகிந்தன் தயாபரராஜா எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தேனீர் வாங்குவதற்காக விடுதியை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து காணாமல்போன 3 நாட்களின் பின்னர் மேல் மருவத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் வீதியோரம் மகிந்தன் தயாபரராஜா வீழ்ந்து கிடந்துள்ளார்.
வீதியோரத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞரை வீதியால் சென்ற மருத்துவர் ஒருவரும், அங்கு இருந்தவர்களும் இலவச நோயாளர் காவு வண்டி எண் 108 இற்கு தகவல் தெரிவித்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் 17ம் திகதி அதிகாலை 5 மணி அளவில் குறித்த இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரை மேல்மருவத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை அழைத்துச் சென்றது யார் என்பது இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.