தமிழர் பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த தேர்த்திருவிழா(Video)
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
இந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று (29.08.2023) காலை நடைப்பெற்றது.

தீர்த்தத் திருவிழா
தீர்த்தத் திருவிழா காலை 6 மணியளவில் கொடித்தம்ப பூசையுடன் ஆரம்பமானதுடன் 7.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது.
வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள்,பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரி சமேதராக துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் எழுந்தருளி தீர்த்தமாடினார்கள்.

இவ் ஆலய வருடாந்த மகோற்வம் இன்று மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.
ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம்
மன்னார் -நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர்
திருவிழா இன்று (29.08.2023) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாக காணப்படும் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவின் 14 நாள் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதன்போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் காவடி எடுக்கப்பட்டு அங்கபிரதிஸ்ட்டை,செதில் காவடி,பறவை காவடி,கற்பூர சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது.

பின்னர் அம்பிகையின் சிலை தேரில் ஏற்றப்பட்டு நானாட்டான் வீதி சுற்றுவட்ட பகுதியூடாக பக்தர்களால் பக்தி பூர்வமாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
செய்தி-ஆசிக்
முள்ளியவளை ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலய தேர்த்திருவிழா இன்று( 29.08.2023) சிறப்புற நடைபெற்றுள்ளது.
அதிகாலை 5.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி 7.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதுடன் சரியாக 8.00 மணிக்கு எம்பெருமான் சிம்மாசனத்தில் அமர்ந்து உள்வீதி வலம் வந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து 9.00 மணியளவில் முருகப்பெருமான் தேரில் ஆரோகணித்து அந்தணர்களின் மந்திர உட்சானடங்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க எம்பெருமான் வெளிவீதி வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
முருகப்பெருமான் இருப்பிடத்தினை சென்றதும் பச்சை சாத்தி தேரில் இருந்து அவரோகணித்து அதன் பின்னர் சண்முக அர்ச்சனை மற்றும் அபிசேகம் இடம்பெற்று தேர்த்திருவிழா விஞ்ஞாபனம் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த தேர்த்திருவிழாவின் போது பக்த்தர்கள் காவடி பாற்செம்பு என்பன எடுத்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்துள்ளார்கள்.
செய்தி-கீதன்













