“அம்மா நான் விடுதலையாகிவிட்டேன்” அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்காக குரல் கொடுக்கும் தமிழ் அகதி
ஓராண்டுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு, அவுஸ்திரேலியா குடிவரவுத் தடுப்பிலிருந்து வெளியே வந்த பொழுது என்னை வரவேற்பதற்காக மக்கள் காத்திருந்தனர். தடுப்பு மையத்திலிருந்து வெளியே நடந்து வந்த பொழுது, “வணக்கம் தனுஷ்” என்றனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக அப்போதே தான் பெயர் சொல்லி அழைக்கப்பட்டேன்.அதற்கு முன்னதாக ‘எண்களை’ கொண்டே தடுப்பு முகாமில் அடையாளப்படுத்தப்பட்டேன் என இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசா குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா ஊடகமொன்றிற்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“2013ம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியா கடல் வழியாக தஞ்சமடைந்தேன். ஆனால் அங்கு எனக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை, மாறாக மனுஸ் தீவில் இருந்த தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டேன். அதன் பிறகு ஆறு ஆண்டுகள் பப்பு நியூ கினியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
2019ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மெல்பேர்னில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
இந்த ஆண்டின் தொடக்கத்தின் கணக்குப்படி, அவரைப் போல் தஞ்சம் கோரிய சுமார் 250 அகதிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கூண்டுக்கு பின்னே தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த வாழ்க்கையை எப்படி விவரிப்பது?
“தஞ்சம் கோரும் மக்கள் சிறைப்படுத்தப்படுகிறார்கள். ஓராண்டில் அவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். அது அவர்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் அழிக்கிறது.
“தற்போது விடுதலையாகி வெளியே இருப்பது தடுப்பில் இருப்பதை விட சிறந்ததாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக விசாவை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. அதாவது, அந்த விசாவின் மூலம் வங்கிகளிலிருந்து எந்த கடனையோ பிற உதவிகளையோ பெற முடியாது.
எங்களுக்கு வேலைக் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. ஏனெனில், வேலை வழங்கும் நிறுவனங்கள் நீண்ட கால விசா எதிர்பார்க்கின்றன. ஒவ்வொரு நாளும் விசாவை பற்றியே சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா கடல் கடந்த தடுப்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக இடமாற்றப்பட்ட 180 க்கும் அதிகமான அகதிகளுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 81 அகதிகள் ஏன் தெரியாமலேயே இன்னும் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
“தடுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தடுப்பில் இருந்த எட்டு ஆண்டுகளில் எனது தாய்க்கு “அம்மா, நான் விடுதலையாகி விட்டேன்,” என்ற ஒரு தகவலை அனுப்ப காத்திருந்தேன்.
இந்த தகவலை நான் அனுப்பி விட்டேன். ஆனால் தடுப்பில் இன்னும் பிற சகோதரர்களால் (அகதிகளால்) அனுப்ப முடியவில்லை,” எனவும் தனுஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.