கொழும்பில் விரைவில் கூடவுள்ள தமி்ழ் முற்போக்கு கூட்டணி
கொழும்பில் ஆகஸ்ட்-2ம் திகதி நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டம் நடைபெறவுள்ளதோடு, இதன்போது செப்டம்பர்-21 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஆராயப்பட்டு அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ”தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கு பெறுகின்ற எமது அரசாங்கம் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
த.மு.கூட்டணி, வெறும் வாய் பேச்சில் காலத்தை கடத்தும் கட்சி அல்ல, என்பதை நாம் எமது முதல் கட்ட 2015-2019 நல்லாட்சி காலத்திலேயே நிரூபித்து உள்ளோம்.
பெருந்தோட்ட மக்கள்
அன்று நாம் ஆரம்பித்து வைத்த பல முற்போக்கு பணிகள் இன்று நின்று போயுள்ளன. அவற்றை மீள ஆரம்பிக்க நாம் மீள ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
வாழ்வாதார காணி உரிமை, வதிவிட வீட்டு காணி உரிமை, இடைகால சம்பளம், கல்வி, சுகாதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சியை த.மு.கூட்டணி ஏற்படுத்தும்.
இந்த அரசு மலையக பெருந்தோட்ட மக்கள் மத்தியில் நாள் சம்பளம், இந்திய நன்கொடை வீடமைப்பு திட்டத்துக்கு காணி வழங்கல், சுயமாக வீடு கட்டி கொள்ள காணி வழங்கல் ஆகிய மூன்று முக்கிய துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்டது.
இந்திய வீட்டு திட்டம்
எமது ஆட்சியில், மலைநாட்டு பெருந்தோட்ட மாவட்டங்களில் தனி வீடுகளை அமைக்க இந்திய வீட்டு திட்டத்துக்கு நாம் தடை இன்றி காணி வழங்குவோம். தவிர சுயமாக சொந்த வீடுகளை கட்டிக்கொள்ளவும் காணி வழங்குவோம். உழைத்து வாழ கொழும்பு உட்பட மாநகரங்ளில் குடியேறி, இன்று வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்கு தொடர்மாடி மனைகளை வழங்குவோம்.
மலைநாட்டில் வாழ்வாதார காணி வழங்கல் மூலம் பெருந்தோட்ட தொழில் துறையில் நமது மக்களை தொழில் முனைவர் பங்காளிகளாக மாற்றுவோம்.
இந்த கொள்கைகள் தொடர்பிலும், ஆகஸ்ட்-2ம் திகதி கொழும்பில் நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் கூடும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு அதிகாரபூர்வ தீர்மானங்களை எடுக்கும்“ என்றும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |