ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளத் திணறும் தமிழ் அரசியல் தலைமைகள்
இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் முக்கியத்துவமான அரசியல் விளைவுகளை தரவல்லது.
அதற்கான தமிழர் அரசியல் தரப்பினர் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே தமிழருக்கான நன்மை - தீமைகள் அமையும்.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி எதிர்கொண்டால் சிங்கள தேசத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதன் மூலமே எமக்கான சாதக நிலையை தோற்றுவிக்க முடியும் என தமிழ் அரசறிவியல் சார் தரப்பு நம்புகிறது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளோ தேர்தல் பற்றிய முடிவுகளை எடுப்பதில் தளம்பல் நிலையில் உள்ளனர். ஒத்தோடும் போக்கையே பெருமளவில் விரும்புகின்றனர்.
ஒரு தரப்பு பகிஷ்கரிப்பு என்கிறது. பரீட்சையில் தோற்றாமல் சித்தியடைவதை பற்றி தமிழ் அரசியல் தலைமைகள் கனவு கண்டு புலம்புகின்றனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின்னர் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மூன்று ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்று முடிந்து விட்டன.
நான்காவது தேர்தலை இந்த ஆண்டு எதிர் நோக்குகிறது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழர் தரப்பினர் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த தேர்தலை எதிர்கொண்டு அடுத்த கட்ட தமிழர் அரசியலை முன்னெடுக்க முடியும் என அரசறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் பொங்குதமிழ் இணையத்தளத்தில் 2009 டிசம்பர் 14ஆம் திகதி கட்டுரை ஒன்றினை வெளியிட்டார்.
பொது வேட்பாளர்
அவர் கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் அதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் தமிழ் அரசியல் தரப்பு அதனை கருத்தில் கொள்ளவும் இல்லை, அறிவுபூர்வமான இந்த அரசியல் நுட்பத்தை புரிந்து கொள்ளவும் இல்லை என்பதுமே உண்மையானது.
ஆனால் இப்போது தாயகத்திலிருந்து அறிவுசார் சமூகம் தமிழர் ஒருவரை பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி பேசத் தொடங்கி விட்டது. இவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி நான் பல முறை கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஊடகப் பேட்டிகளையும் வழங்கியுள்ளேன்.
இருப்பினும் தாயகத்தில் இருந்து இத்தகைய கருத்து மேலெழுந்து வருவதுதான் பொருத்தமானதும், நடைமுறைக்கு சாத்தியமானதும், ஏற்புடையதும் காத்திரமான பங்கை வகிக்கவும் முடியும். தமிழ் அரசியல் தலைமைகளை ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான அழுத்தத்தை கொடுக்கவல்ல சக்தியாகவும் அமையும்.
இந்த வகையில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில் "இமாலயப் பிரகடனம் என்பது இலங்கை ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்தியைக் கொண்டது.
ஈழத்தமிழர்கள் இறைமை பற்றியே பேசுகிறார்கள் தமிழ் அரசியல் தலைமைகளும், கட்சிகளும் இறைமை பற்றியே வாய்கிழிய கிழிய பேசுகிறார்கள். அப்படியானால் நான் கேட்கிறேன். ஈழத்தமிழன் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி உனது இறைமையை வெளிப்படுத்து. இது மக்கள் இறைமை யுகம். எனவே இந்த மக்கள் இறைமை யுகத்தில் இந்தத் தேர்தலானது ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு வழங்கியிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தல்
ஈழத்தமிழரின் இறைமையை வெளிப்படுத்த அதனைச் செய்து காட்ட அதைவிடுத்து தேர்தலை பகிஸ்கரிக்கப் போகிறீர்களா? நிராகரிக்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் நிராகரிப்பதனாலோ, பகிஷ்கரிப்பதனாலோ இன்னொரு வேட்பாளருடைய தோல்வியை உத்தரவாதப்படுத்த போகிறீர்களா? நிச்சயமாக இவை அனைத்தினுடைய விளைவுகளும் எதிரிக்கு சேவகம் செய்வதாகவே அமையும்.
இறைமை என்பது மக்களுக்கு உரித்துடையது. மக்கள் இறைமையினுடைய நியதிக்குள்ளேதான் இயங்க வேண்டும், இயங்குகிறார்கள் எல்லா நாடாளுமன்றத் தேர்தலிலும் ஈழத்தமிழர்கள் தமிழ்த்தலைமைகளுக்காக வாக்களிக்க வேண்டும். அந்த வக்குகளால் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். ஆனால் அறிவியல் ரீதியாக தமிழ் மக்கள் தமது இறைமையை பிரயோகித்து உத்தரவாதப்படுத்த வேண்டிய ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பது அரசறிவியலுக்கு முரணானது.
தேர்தலை பகிஷ்கரிப்பதோ அல்லது சிங்கள வேட்பாளர்களை ஆதரிப்பதோ இரண்டும் இமாலய பிரகடனத்தினை ஏற்பதாகவும் அதற்கு உறுதுணையாக நிற்பதாகவும் அமையும். எனப் பேராசிரியர் கணேசலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்து அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமாகிய மா.நிலந்தன் அவர்கள் கூட்டத்தில் பேசுகையில் கட்டவேலி கிராமத்தில் நடந்த கூட்டமொன்றில் தான் பேசியபோது அந்தக் கூட்டத்தில் இருந்து அவர்களை நோக்கி ”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தினால் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்று கேட்டபோது பெரும்பான்மையானவர்கள் அந்தப் பொது வேட்பாளருக்கே வாக்களிப்பதாக கையை உயர்த்தினார்கள். சிலர் தமிழீழம் என்றால் அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என்று கிசுகிசுத்தார்கள்” என்று சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் ”ஒரு பொது வேட்பாளரை ஏன் தமிழர்கள் நிறுத்த வேண்டும்? இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் நிச்சயமாக வெல்ல மாட்டார். ஆனால் அவர் சிங்கள வேட்பாளர்களின் வெற்றியை கேள்விக்கு உள்ளாக்குவார், சிக்கலுக்கு உள்ளாக்குவார் எப்படி என்றால் அளிக்கப்படும் வாக்குகளில் 50 வீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலையில் தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் வெற்றிக்கான இந்த 50% வாக்கை சிங்கள வேட்பாளர்கள் பெறுவது கடினமாக அமையலாம்.
தமிழ் தேசிய சக்தி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வாக்குகளால் மட்டும் 50%க்கு மேல் பெற முடியாத நிலையே காணப்படுகிறது. எனவே இந்நிலையில் தமிழ் வேட்பாளருடன் சிங்கள தலைமை பேரம் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஆனாலும் இலங்கை அரசியலில் சிங்கள தலைமைகள் தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேரம் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் அவர்கள் நிச்சயமாக சிங்கள தேசத்தில் வெற்றி வாய்ப்பை இழப்பர்.
எனவே சிங்கள தலைமைகள் பகிரங்க உடன்பாட்டுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள் என்பதால் இந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்களுடைய ஒரு மறைமுக கருத்துக் கணி்ப்பு வாக்கெடுப்பாக பிந்திய ஒரு மக்கள் ஆணையை பெறுவதற்கான தேர்தலாக பிரயோகிக்க முடியும். அதனை சர்வதேசரீதியாக வெளிக்காட்டவும் முடியும்" என திரு. ம. நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் "கடந்த 15 ஆண்டுகளாக நடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் ராஜபக்சக்களுக்கு எதிராகவே தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
எனவே தமிழ் வேட்பாளரை நோக்கி அனைத்து தமிழ் வாக்குகளையும் ஒருங்கிணைத்து குவித்த ஒரு தமிழ்த் தேசிய சக்தியாக உருத்திரட்ட முடியும்"" எனக் குறிப்பிட்டார.
மேலும் தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஐக்கியம் பற்றியும் தமிழர் தமது உரிமைகளை பெறுவதற்கு கூட்டு முயற்சி ஒன்று அவர்களிடம் சாத்தியமில்லை என்பதனை காணமுடிகிறது என்றும் கூறினார். கிழக்கு கு மாகாண கட்டளைத் தலைமை அதிகாரியாக இருந்த ஜெனரல் கோணிபஸ் பெரேரா இலங்கை ராணுவம் பெற்ற வெற்றி எவ்வாறு சாத்தியப்பட்டது என்பதனை உதாரணங்காட்டிப் பேசினார்.
தமிழரின் அரசியல்
"இராணுவத்தின் யுத்த வெற்றி என்பது ஒரு கூட்டு முயற்சி. இலங்கை அரசினதும் அரசாங்கத்தினதும் அனைத்து அங்கங்களும் இராணுவத்தோடு இணைந்து செயல்பட்டதனால் முள்ளிவாய்க்கால் யுத்தத்தை வெல்ல முடிந்தது. இந்த வெற்றி ஒரு தனி நபருடைய வெற்றி அல்ல. அது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்று குறிப்பிட்டார் என்று கூறி அவ்வாறுதான் தமிழ் மக்களுடைய அரசியல் வெற்றி என்பதும், போராட்டங்கள் என்பதும் ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டுமே ஒழிய தனி நபருடைய முயற்சியாலோ, அல்லது தனிக்கட்சிகளுடைய முயற்சியினாலோ, போராட்டங்களினாலோ எதனையும் வென்றெடுத்திட முடியாது" எனக் குறிப்பிட்டார்.
தனிக் கட்சிகளால் நேற்று வரை எதனையும் மீட்க முடியவில்லை. தையிட்டியில் புத்த விகாரையை அகற்றவும் முடியாது தடுக்கவும் முடியாது. தமிழ் மக்கள் கூட்டு முயற்சி இன்றி எந்த வெற்றியும் எதிர்காலத்தில் அடைய முடியாது எனக் குறிப்பிட்டார்.
எனவே மேற்குறிப்பிட்ட இருவருடைய கருத்துக்களும் ஒன்று. யாழ் பல்கலைக்கழக கல்வி சமூகத்தில் இருந்தும் மற்றையது தமிழ் அறிவியல் சார் பொதுப்பரப்பிலிருந்தும் வெளி வந்திருக்கிறது . இது தமிழ் அரசியல் பரப்பிற்கு தேவையாகவும் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் அறிவியல் பரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான கோரிக்கைகள் எழத் தொடங்கி விட்டன.
இப்பொது அது பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழரின் அரசியல் செயற்பாட்டு சக்திக்கும் அறிவியல் கருத்துருவாக்க சக்திகளுக்கும் இடையேயான கூட்டிணைவு இடைவெளிதான் கடந்த 75 ஆண்டுகால தமிழ அரசியல் தோல்விகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எனவே தமிழ் மக்கள் தொடர்ந்து 75 ஆண்டுகளை தோல்வி ஆண்டுகளாக சந்தித்து இருக்கிறார்கள். எதிர்வருகின்ற ஆண்டுகளையாவது வெற்றிகளை அடைவதற்கான படிக்கல் ஆண்டுகளாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்வது முதலாவது அர்த்தத்தில் தமிழ் மக்களுடைய ஜனநாயகத்தை மறுதலிக்கின்ற செயற்பாடாகும். இரண்டாவவது தமிழ் மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதை தடுப்பதாகும். பகிஷ்கரிப்பு செய்வதன் மூலம் சிங்கள தேசத்தில் தமிழின விரோதிகளை சிம்மாசனத்தில் அமர்த்த உதவுவதாகும்.
அடுத்து தமிழ் மக்களின் உரிமைகளை இன்றைய ஜனநாயக உலகில் வாக்களிப்பதன் மூலமே உறுதிப்படுத்த முடியும். உதாரணமாக ஒரு மாணவன் திறமையானவன், தகுதி வாய்ந்தவன் என்பதை நிரூபிப்பதற்கு பரீட்சையே துணை புரிகின்றது. பரீட்சையில் தோற்றி அது கூடிய புள்ளிகளை பெறுபவனே சித்தியடைந்தவனாக, தகுதி வாய்ந்தவனாக வெளிக்காட்டப்படுவான்.
மாறாக பரீட்சையில் தோற்றாமல் வீரப்பிரதாபங்களை பேசி யாரும் தகுதியானவனாக தன்னை நிலை நிறுத்த முடியாது. இவ்வாறுதான் அரசியலிலும் தேர்தலை எதிர்கொண்டு மக்களின் வாக்குகளை திரட்டுவதன் மூலமே மக்கள் பலத்தினை நிரூபிக்க முடியும். மாறாக தேர்தலை எதிர்கொள்ளாமல் பகிஷ்கரித்துவிட்டு எவ்வாறு மக்கள் சக்தி எம்மிடம் உள்ளது என்பதை நிரூபிக்க முடியும்? இங்கே இன்னும் ஒரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்பட்டோர் வாக்களித்தோர் 75% ஆக இருக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தோர் 83.72%மாக உள்ளது. இது பொதுவாக இலங்கையில் நடந்த அனைத்து நாடாளுமன்ற தேர்தல்களைவிட ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களித்தோர் விகிதம் அதிகமாக உள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
எனவே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆகவே ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் வாக்குகளை ஒன்று குவிப்பதற்கான வாய்ப்புகளும், காலச் சூழலும் இப்போது மிகச் சாதகமாக உள்ளது. எனவே தமிழ் மக்கள் உயர்ந்த பட்ச கோரிக்கையை முன்வைத்து ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
உயர்ந்த பட்ச கோரிக்கை
இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமது உயர்ந்த பட்ச கோரிக்கையை உதாரணமாக “தமிழர் தாயக கோட்பாட்டை அங்கீகரி"அல்லது "தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க" என்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை நிரூபிக்க கூடிய வகையில் அனைவரும் அந்த கோரிக்கைக்கு வாக்களித்து அதனை ஒரு மக்கள் ஆணையாக பெற்று அந்த ஆணையை ஈழத் தமிழர் தேசிய அபிலாசை வென்றெடுப்பதற்கான சர்வதேச அரசியல் செயற்பாட்டுக்கு அணி சேர்த்து வைக்க முடியும்.
அத்தோடு இவ்வாறு தேர்தலை எதிர்கொண்டு தமிழர் அனைவரும் ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சிங்கள தேசத்தில் 50வீத வாக்குகளை பெறாது இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு உட்பட்டு ஒருவர் ஜனாதிபதியானால் பெரும்பான்மை பலமற்ற. ஒரு ஜனாதிபதி என்ற நிலையை சிங்கள தேசத்தில் ஏற்படுத்த முடியும். இரண்டாவது தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி பதவியில் இருக்கிறார் என்பதையும் உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும்.
மூன்றாவது இலங்கை அரசியல் எல்லைக்குள் ஈழத்தவர்களுக்கான பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதும் சர்வதேச தலையீட்டின் மூலமே ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதனை வெளி உலகத்திற்கு காட்டவும் முடியும்.
மாறாக தேர்தலை பகிஷ்கரிப்பதோ நிராகரிப்பதோ அல்லது சிங்கள தலைவர்களோடு இரகசிய பேரங்களில் ஈடுபட்டு அவர்களை ஆதரிப்பதோ தமிழ் மக்களுக்கு எந்த நலனையும் பெற்றுத் தராது மாத்திரமல்ல அது சிங்கள தேசத்துக்கு சேவகம் செய்வதாகவே அமையும்.
தேர்தல் வியூகம்
தமிழ் மக்களை தொடர்ந்து சிங்கள தேசத்துக்கு சேவகம் செய்ய வைக்கும் இராஜதந்திர உத்தியையே சிங்கள தேசம் எப்போதும் கையாண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போதும் போலி துவாரகா அரங்கேற்றமும் இமாலய பிரகடன அரங்கேற்றமும் தமிழ் மக்களை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தேசத்திற்கு சேவகம் செய்வதற்காக குறிப்பாக ரணில் விக்கிரமசிங்காவிற்கு சேவகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாகவே தமிழ் மக்கள் கருத வேண்டும்.
எனவே தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு பொது இணக்கத்தின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இந்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டு, தமக்கான மக்களாணையே தமது இறைமை என்ற மக்கள் இறைமை கோட்பாட்டை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இந்தவகையில் ஒரு பொது வேட்பாளரை அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு அன்னையை நிறுத்தி தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் திரண்ட குரலாய் அதனை முன்னெடுக்க முடியும். ஈழத் தமிழரின் ஆகப்பிந்திய ஒரு மக்கள் ஆணையை பெற இது உதவும். யாழ்ப்பாணத்தில் மேற்படி இரு அறிவியலாளர்களும் இவ்வாறு மக்கள் முன் இக்கருத்தை முன்வைத்து முன்னெடுத்துள்ளமை ஒரு நல்ல அறிகுறியாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |