தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தமிழ் அரசியல் தலைவர்கள்..!
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து, தங்களின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றை கையளித்துள்ளனர்.
இந்த சந்திப்பு(04.07.2026) தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை கங்கரநேசன், சென்னை தமிழர் கட்சியின் தலைவர், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், சிரேஷ்ட சட்டத்தரணி சுபாஸ், சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜா காந்தீபன் மற்றும் கொள்கைப் பிரிவு செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, நேற்று தமிழ்நாடு முதலமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் மீண்டும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 18 டிசம்பர் 2025 அன்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடன் இடம்பறெ்ற சந்திப்பின் பின்னர், எமது கோரிக்கைகளின் அடிப்படையில் அவர் 11 பிப்ரவரி 2026 அன்று இந்தியப் பிரதமருக்கு ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக எழுதிய கடிதம் நினைவூட்டப்பட்டது.
சமஸ்டி ஆட்சிக்கான ஒத்துழைப்பு
அந்தக் கடிதத்தில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளைத் தொடர்ந்து உறுதியுடன் வலியுறுத்துவதுடன், இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய மத்திய அரசுக்கு தேவையான அரசியல் அழுத்தங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக, தமிழர்களின் தேசம், தனித்துவமான மக்கள் என்ற அங்கீகாரமும், அவர்களின் சுயநிர்ணய உரிமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில், கூட்டாட்சிக் கட்டமைப்பிலான (சமஷ்டி) அரசியல் தீர்வை ஏற்படுத்த இந்தியா உறுதியான அரசியல் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச, சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் எல்லைத் தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக, கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, இரு தரப்பு மீனவர் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, நிலையான தீர்வை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக அவரால் தெரிவிக்கப்பட விடயமும் நினைவூட்டப்பட்டது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை
மீனவர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் தொடர்ந்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல்வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேவேளை, தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்குத், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மனிதாபிமானத் தேவைகளுக்கும் ஏற்ப விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பிரதிநிதித்துவக் குழுவை அமைத்து, அதன் ஊடாக ஈழத் தமிழர் அரசியல் விவகாரங்களை மையப்படுத்திய அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
