தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் நூற்றுக்கணக்கான வெற்றிடங்கள் - வெளியான தகவல்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் சுமார் 300 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவையில் 600 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய போதிலும், அவர்களில் சுமார் 50 சதவிகிதத்தினர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றமை தெரியவந்துள்ளது.
அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள்
அதன்படி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் நிர்வாக அதிகாரிகள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட உளவியல் அதிகாரிகள், கணக்கு உதவி அதிகாரிகள் மற்றும் உதவி ஆலோசகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல், குழந்தைகளைப் பாதுகாத்தல், அனைத்து வகையான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துதல் ஆகியவை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பங்காகும்.
இந்தப் பணியாளர் பற்றாக்குறையின் காரணமாக, குழந்தைகள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தேவையான ஆட்சேர்ப்புகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.