சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தேச மத்திய குழுக்கூட்டம் வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று வவுனியாவில் கூடி முடிவு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மத்திய குழு மீண்டும்
கூடாது. மத்திய குழு ஏற்கனவே எடுத்த முடிவை மாற்றத் தேவையில்ல. ஆயினும்,
கட்சியின் மூத்த தலைவர்கள் மீண்டும் 16 ஆம் திகதியளவில் கூடி கட்சியின்
நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் ஓர் அறிக்கையை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஏற்கனவே கட்சியின் மத்திய குழு கூடி இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை எடுத்து அறிவித்துள்ளமை தெரிந்ததே.
கட்சியின் கொள்கை ரீதியான முடிவு
கட்சியின் யாப்பின்படி கட்சியின் கொள்கை ரீதியான முடிவை எடுக்கும் உயர் அதிகாரம் மத்திய குழுவுக்கு மட்டுமே உண்டு என்பதாலும் - இனி, இந்தத் தேர்தலுக்கு முன்னர் மத்திய குழு மீண்டும் கூடும் வாய்ப்பு இல்லாமையாலும் - மத்திய குழுவின் முன்னைய தீர்மானத்தை ஒட்டியதாகவே கட்சித் தலைவர்கள் இனிமேல் முடிவை எடுத்து விளக்க அறிக்கையை வெளியிடுவர் என்றும் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை எடுத்து விட்டமையால், அதனை மாற்ற முடியாது, அவருடனேயே தொடர்ந்து பேச வேண்டி இருக்கும்" - என்று இன்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார் எனவும் அறியவந்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் உறுதிமொழிகளை எழுத்தில் எடுப்பது, அவற்றுக்கு காலவரையறை குறிப்பது போன்றவை குறித்து சஜித் பிரேமதாசவுடன் தொடர்ந்து உரையாடல்களை மேற்கொள்ளுமாறு இன்றைய வவுனியா கூட்டத்தில் சுமந்திரனுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இன்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சி.சிறீதரன் எம்.பி. ஆகியோர் பங்குபற்றினர்.
இந்தக் குழுவில் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் தி.சரவணபவனும் இடம்பெற்றிருந்த போதிலும் இன்றைய கூட்டத்துக்கு அவர் சமூகம் தர முடியவில்லை.
கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம்
எனினும், ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு மாறாக எந்த முடிவு எடுக்கப்படக்கூடாது என்ற தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அவர் பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார் என கூறப்படுகின்றது.
மீண்டும் இந்த தலைவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி கூடி தமிழ் மக்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்தும் அறிக்கையை அங்கீகரித்து வெளியிடுவர் என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று தெரியவந்தது.
எனினும், கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த மாவை சேனாதிராஜா அந்த அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி வெளிவரும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |