புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னர் தமிழ் பேசும் மக்கள் குறித்த செய்திகள் எவ்வாறு அறிக்கையிடப்பட்டன?
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஏழு நாட்களில் தமிழ்ப் பத்திரிகைகளில் காணப்பட்ட பிரதிபலிப்பை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
ஒரு பகுதியாக, கடந்த ஆட்சியை இல்லாதொழித்த புதிய ஜனாதிபதிக்கு ஒரு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவர் குறித்த நம்பிக்கையான எதிர்பார்ப்புகளுடன் கருத்துக்களை வெளியிட்டமை. இரண்டாவது பகுதியாக, அடுத்த தரப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் சித்தாந்தம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென மறுபக்கம் தமது விரக்தியை வெளிப்படுத்திய அதேவேளை, புதிய அரசியல் நடவடிக்கையின் அவசியத்தை வெளிப்படுத்தியமை.
"ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு" என்ற தலைப்பில் மற்றும் "தமிழ், முஸ்லிம் மக்களினதும் பேராதரவுடன் அமோக வெற்றி" என்ற உப - தலைப்பில் செப்டெம்பர் 23ஆம் திகதி அரசாங்க தமிழ் பத்திரிகையான தினகரன் பத்திரிகையில் அதிகளவு இடம் ஒதுக்கப்பட்டு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் உத்தியோகபூர்வ எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக வலைத்தளத்தினூடாகப் புதிய ஜனாதிபதிக்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தியுடன் செப்டெம்பர் 23ஆம் திகதி அன்று காலைமுரசு, தினகரன் மற்றும் புதியசுதந்திரன் ஆகிய பத்திரிகைகள் முறையே பக்கங்கள் 5, 3 மற்றும் 7 இல் வெளியிட்டிருந்தன.
தமிழ் அரசியல்வாதிகள்
"அநுரவின் வெற்றி சமூக நீதியை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும்" என அவர் குறிப்பிட்டிருந்தமை இங்கு அவதானிக்கத்தக்கதாகும்.
செப்டெம்பர் 24ஆம் திகதி காலைக்கதிர் 5ஆம் பக்கம் மற்றும் ஈழநாடு பத்திரிகையின் 12ஆம் பக்கத்தில் வெளியான செய்தியில், புதிய ஜனாதிபதி இனவாதமற்ற ஆட்சியை முன்னெடுப்பாரெனக் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் கூறியதாகவும் கடந்த பல்லாண்டுகாலமாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் இன்னோரன்ன பிரச்சினைகள் ஜனாதிபதியாகிய தங்கள் காலத்தில் தீர்த்து வைக்கப்படும் என பெரிதும் நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்றைய தினமே ஈழநாடு பத்திரிகையின் 7ஆம் பக்கத்தில் இரு தமிழ் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி ஒரு பாரிய முற்போக்கான நடவடிக்கை எனவும் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தன்னால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ம. ஆ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் திஸாநாயக்கவின் வெற்றி பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டிய தர்மலிங்கம் சித்தார்த்தன், ஊழல் மோசடிகள் அற்ற தூய்மையான நாடாக இலங்கையை மாற்ற முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
அதேநேரம், செப்டெம்பர் 25ஆம் திகதி தமிழன் நாளிதழின் 6ஆம் பக்கத்தில் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்த கருத்து ஒன்று அறிக்கையிடப்பட்டிருந்தது. புதிய ஜனாதிபதியும் இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடியர், நாங்களும் எமது மக்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருப்பவர்கள். அத்துடன் மக்கள் விடுதலையை நன்கு புரிந்து கொண்டவர் என்ற வகையில் தமிழ் மக்களுக்கான காத்திரமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நம்பிக்கையூட்டும் வாழ்த்துச் செய்திகள் மட்டுமின்றி, தமிழ் அரசியலில் சில அமைதியற்ற சூழலைச் சுட்டிக்காட்டும் செய்திகளும் வெளியாகின.ஷ
செப்டெம்பர் 23ஆம் திகதி காலைமுரசு மற்றும் காலைகதிர் நாளிதழ்களின் முதற்பக்கத்தில், பொது வேட்பாளரைக் களமிறக்கியமையானது படுதோல்வியடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான முயற்சிகள் தவிர்க்கப்பட்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நனவாக்க சாதகமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் ம. ஆ. சுமந்திரன் கோரியிருந்த விடயம் அறிக்கையிடப்பட்டிருந்தது.
செப்டம்பர் 25ஆம் திகதி ஈழநாடு நாளிதழின் 4ஆவது பக்கத்தில், தேர்தல் முடிவுகுறித்து கவலை தெரிவிக்கும்போது, தமிழ் அரசியலில் புதிய திசையின் அவசியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியானது.
தென்னிலங்கை சிங்கள மக்கள் ஏதேனும் மாற்றத்திற்காக வாக்களித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் அவ்வாறான மாற்றத்திற்கு தயாராக உள்ளார்களா என்ற கேள்வி இங்கு ஆழமாக எழுப்பப்பட்டுள்ளது. பாரம்பரிய தமிழ்த் தலைமைகள் தமது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கூட தமிழ் மக்கள் அந்தப் பாரம்பரிய தமிழ் தலைவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். தமிழ் மக்கள் இனியும் மாற்றத்தை ஆழ்ந்து சிந்திக்க தவறினால் அவர்களுக்கு அரசியல் வெற்றி பெற்றுக்கொள்ள முடியாது போகும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
தென்னிலங்கையின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளின் அறிக்கையிடல்
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததனை தொடர்ந்து, தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாகச் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் தெற்கில் காணக்கூடியதாக இருந்த பிரமாண்டமான ஊடக பிரசாரம் ஒரேயடியாக மறைந்து சென்றதுடன் பிரதான நீரோட்ட பத்திரிகைகளிலும் கூட வட கிழக்கு மற்றும் மலையக மக்கள் தொடர்பான செய்திகள் ஒரே கணத்தில் மாயமாகி காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள - ஆங்கில பத்திரிகைகள்
தேர்தலுக்குப் பிந்தைய காலத்தின் முதல் வாரத்தில், தென்னிலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில பிரதான நீரோட்டப் பத்திரிகைகளில் குறித்த மக்களைப் பற்றிய செய்திகள் மிகவும் அரிதாகவே காணப்பட்டன. சிங்களப் பத்திரிகைகளில் மவ்பிம பத்திரிகையில் மாத்திரமே தமிழ் மக்கள் பற்றிய ஓரிரு சிறு செய்திகள் வெளியாகின. ஆனால் சிங்களப் பத்திரிகைகளுடன் ஒப்பிடும்போது ஆங்கிலப் பத்திரிகைகள் வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் போக்குகள் குறித்து செய்தி அறிக்கைகளை வெளியிட அதிக இடம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகதாகும்.
செப்டெம்பர் 23ஆம் திகதி தி டெய்லி மோர்னிங் நாளிதழின் முதல் மற்றும் இரண்டாவது பக்கங்களில் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் பொது வேட்பாளர் மற்றும் அதன் அரசியல் போக்கு குறித்து கருத்து தெரிவித்த அறிக்கையொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
புதிய அரசாங்கம் தமிழர்கள் என ஒரு மக்கள் இருப்பதை முதலில் அங்கீகரித்து 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராகச் செயற்பட்டதன் காரணமாகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்கவை விட ரணில் விக்ரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்கும் வாக்களித்தமை இங்கு நினைவுகூரப்பட்டது.
அந்த அறிக்கையின்படி, வாக்குகள் மிகவும் குறைவாக இருந்தாலும், தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னம் என்று கூறியிருந்தார். நாட்டில் எந்த மாற்றத்திற்காகச் சிங்கள மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தினார்களோ அதே போன்று தமிழ் மக்களும் அவ்வாறானதொரு மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
செப்டெம்பர் 24ஆம் திகதி சிலோன் டுடே நாளிதழின் மூன்றாவது பக்கத்தில் 'புதிய ஜனாதிபதிக்கு முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சிகள் வாழ்த்து' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அமீர் அலி போன்ற பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அங்குக் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்தத் தலைவர்கள் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் பொது காரணியாகக் குறிப்பிடப்பட்டிருந்தாவது நாட்டில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்து, புதிய ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அதேநேரத்தில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை வழங்கவும் செயற்படுவாரென அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
தமிழ் பொது வேட்பாளர்
அன்றைய தினமே மவ்பிம நாளிதழின் முதற்பக்கத்தில் தமிழ் வேட்பாளர் குறித்து தமிழ் மக்கள் பொதுச் சபையின் கருத்துக்களை தெரிவிக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. “வடக்கு கிழக்கை இணைத்த பொது வேட்பாளர் – தமிழ் மக்கள் பொதுச் சபை” என தலைப்பிடப்பட்டிருந்தது.
சட்டத்தால் பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் எனத் தமிழ் மக்கள் பொதுச் சபை அறிவித்திருந்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டமைக்கு அமைய தமிழ் மக்களின் அபிலாசையை உலகிற்கு எடுத்துச் செல்லவே தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் களமிறங்கினார்.
புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் மக்கள் பொதுச் சபை, தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வதன் மூலமே நாட்டில் பல்கலாசாரத்தை பேணி பாதுகாக்க முடியும் என்பதையும் நினைவுபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய இரு ஆங்கில நாளிதழ்கள் முறையே செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மூன்றாவது பக்கத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அறிக்கையுடன் கூடிய செய்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தன.
அந்த அறிக்கை இரண்டிலும் உள்ளடங்கிய முக்கிய யோசனை என்னவென்றால், கூட்டாட்சி தீர்வு குறித்து கலந்தாலோசிக்க ஒப்புக்கொண்டால், புதிய ஜனாதிபதியை ஆதரிக்கக் தமது கட்சி தயாராக உள்ளது என்பதாகும். சிங்கள மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் எனவே புதிய ஆட்சி தமிழ் மக்களுடனான அர்த்தமுள்ள அரசியல் ஈடுபாட்டிற்கு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 26 ஆம் திகதி தமிழ், முஸ்லிம், மலையக தோட்ட மக்கள் பற்றிய எந்தச் செய்தியும் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகாத நிலையில், செப்டெம்பர் 27ஆம் திகதி மவ்பிம நாளிழில் முதற்பக்கத்தில் பொதுத் தேர்தலில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாக செய்தி மூலத்தை குறிப்பிடாத செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறாகக் கடந்த வாரத்தில் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் அல்லது பெருந்தோட்டங்கள் அல்லது பிற புறப்பிரதேசங்கள் தொடர்பில் பத்துக்கும் குறைவான செய்தி அறிக்கைகளே பிரசுரமாகியிருந்தன. இது தேர்தல் காலத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.
புதிய நியமனங்கள், சத்தியப் பிரமாணம், மாற்றத்திற்கான தென்னிலங்கையின் எதிர்பார்ப்புகள், தோல்வியின் பின்விளைவுகள் எனக் கொழுந்துவிட்டு எரியும் ஊடகங்கள், தமது குறைந்தபட்ச உரிமை கோரிக்கையை முன்வைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றித் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட கருத்துக்களை கூட உடனடியாக மறந்துவிட்டன.
மேலும், அவர்களில் பெரும்பாலானோர் இன்னொரு தேர்தல் நெருங்கும் போதுதான் அந்த மக்களை மீண்டும் நினைவுகூருவார்கள்.
(இந்தக் கட்டுரை செப்டெம்பர் 23 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் மூன்று மொழிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாளிதழ்களின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.)
கட்டுரை - சுபாஷினி சதுரிகா
மொழிபெயர்ப்பு - ரிக்சா இன்பாஸ்
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 23 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.