ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - ஈ.பி.டி.பி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என ஈ.பி.டி.பி மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று(15.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழருக்கு கரிநாள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசு கட்சியின் இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது தமிழரசு கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த மறைந்த சம்பந்தன் இலங்கை தேசிய கொடியை அசைத்து தமிழர்களுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக சர்வதேசத்துக்குத் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் இன்று அந்த கட்சியினர் தமிழருக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்றும் கூறுகின்றனர்.
இவ்வாறு இவர்கள் காலத்திற்கு காலம் நேரத்துக்கு நேரம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவை தேடித்தர வேண்டும் என்ற நோக்கம் இல்லை.
தங்களுடைய அரசியல் இருப்புக்காகவும் தேவைகளுக்காகவும் கால காலமாக அரசியல் ஆசன இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அரசியல் செய்ய முடியாத கால கட்டங்களில் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கும் தேர்தல் வரும்போது கூட்டுச் சேர்ந்துகொள்வார்கள், தேர்தல் முடிந்த பின்னர் ஆளுக்கு ஆள் பிரிந்து சென்று விடுவார்கள்.
ஆறு கட்சிகளின் கூட்டுச் சேர்வு
இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் இருப்பு தான் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. எனவே இந்த ஆறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதனை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.
மக்கள் விரைவில் உங்களுக்கான பதிலை தருவார்கள். இந்த கூட்டுச் சேர்வு குறித்து வடக்கு மாகாணம் பாதிக்காவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களுடைய இருப்பினை நிச்சயமாக பாதிக்கும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களால் அரசியல் செய்ய முடியாவிட்டால் நீங்கள் தயவு செய்து உங்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்.
நாட்டிலே படித்த வேலையற்ற பட்டதாரிகள் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அவர்களிடம் தமிழரசு கட்சியை கொடுங்கள். அவர்கள் அதை வழிநடத்திச் செல்வார்கள்.
காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்தி விடவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan