தமிழ் தரப்பினர் யாரும் பிரதமர் பதவியினை ஏற்றுக்கொள்ளக்கூடாது: வினோநோகராதலிங்கம்
இலங்கையில் உள்ள சூழ்நிலை காரணத்தினால் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் மிகக்குறைவு காணப்படுகின்ற போது பிரதமர் பதவிகூட இப்போது தமிழ் மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு-மாந்தை கிழக்கு பிரதேசத்தில் விளையாட்டு கழகங்கள் மற்றும் மாதர் சங்கங்கள் ஆகியவற்றிற்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ள போதே கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

''சபாநாயகர் அவர்கள் சர்வகட்சி கூட்டத்திலே ஜனாதிபதி பதவி விலகுவதாகவும் அதே
போல் புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். ஆனால் சபாநாயகருடைய அந்த முடிவுகள், சர்வகட்சி கூட்டத்திலே எடுக்கப்பட்ட
முடிவுகள் இன்னுமும் அமுல்படுத்தப்படவில்லை.
13 ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் என ஒரு கருத்து இருக்கிறது அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை இந்த கால அவகாசம் நம்பிக்கை இல்லாத தன்மையை இந்த நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கிறது.
மக்களின் எதிர்ப்பு

இதில் ஏதாவது தந்திரமான செயற்பாடுகள் உள்ளனவா என்று இப்போது சொல்ல முடியாது, இன்னமும் இரு நாட்களிலே தெரியவரும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி உடன் பதவி விலகவேண்டும் அதேபோலத்தான் பிரதமரையும் இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை.
அவர் தேர்தல் மூலம் பிரதமராவதற்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவதற்கோ ஜனநாயக ரீதியாக அனுமதி வழங்கவில்லை எனவே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எதிராகத்தான் மக்கள் எழுந்துள்ளார்கள். எங்கள் கட்சியினை பொறுத்தமட்டில் இருவரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
அந்த இடத்திற்கு யார் வரவேண்டும் என்பதில் எங்களுக்கும், எங்கள் கட்சிகளுக்கும், மக்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம். யார் அந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதில் இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை.தமிழர் தரப்பில் இருந்துகூட ஒருவரை பிரதமராக நியமிக்கவேண்டும் அதற்கு கட்சிகள்,தலைவர்கள் ஆதரவு வழங்கி இருக்கின்றார்கள்.
நிரந்தர தீர்வுக்கோரி தமிழ் மக்கள்
எங்களை பொறுத்தமட்டில் இப்பொழுது இருக்கின்ற நிலையில் எங்கள் தமிழ் மக்களின் இனபிரச்சினைக்கு நிதந்தர தீர்வு எற்படுத்தப்பட்டு அது அமுல்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற சூழ்நிலையினை அவர்கள் உருவாக்கிவிட்டால் எந்த பதவிகளையும் எடுக்க நாங்கள் தயாராகி இருக்கின்றோம்.
இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு நிதந்தர தீர்வினை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் மிகக்குறைவு. பிரதமர் பதவிகூட இப்போது தமிழ் மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்களையும் ஒரு அரசியல் சதிவலைக்குள் கொண்டுசென்று நெருக்குகின்ற நிலமையினை உருவாக்கும்.
இலங்கை அரசியல் அமைப்பிற்கு கட்டுப்பட்டுத்தான் அடுத்த எந்த நகர்வையும் எடுக்கமுடியும் அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அடுத்த தெரிவுகளுக்குள் நாங்கள் பங்காளராக இருக்கலாம்.
ஆனால் யார் என்பதை தமிழ் மக்கள் சார்பில் எல்லோரும் இணைந்து தீர்மானித்து உயர் பதவிகளில் வரவேண்டியது யார் என்பதை நாங்களும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக நாங்கள் நாடாளுமன்றத்தில் நிச்சயமாக இருப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.



