ஜனாதிபதித் தேர்தல் குத்துக்காலில் எழுச்சி பெறவேண்டிய தமிழ்த் தேசியம்
இலங்கை அரசியலின் செல்நெறி என்பது ஏனைய நாடுகளுக்கும், அரசியல் அவதானிகளுக்கும், இராஜதந்திரிகளுக்கும் புரியாத புதிராகவும், விசித்திரமானதாகவும் தோன்றும். ஆனால் இலங்கையின் அரசியல் எப்போதும் ஒரே திசையிலும் எந்த மாறுதல்களும் இன்றி தொடர்ந்து பயணிக்கிறது.
இலங்கையின் கடந்த 2500 ஆண்டு கால அரசியல் போக்கின் வழித்தடத்தை வரலாற்று ரீதியிலும், மெய்யியல் ரீதியிலும், சமூகவியல் ரீதியிலும் ஆராய்ந்தால் இந்த விசித்திரத்தின் உண்மை நன்கு புரியும். இலங்கையின் வரலாற்று நூலாக சொல்லப்படும் மகாவம்ச நூலை கிபி 6ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதிய மகாநாம தேரர் ""இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தானது"" என வலியுறுத்தும் "தம்மதீப" கோட்பாட்டை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து "இராட்சியத்தின் சிம்மாசனத்தில் ஒரு பௌத்தனே அமர வேண்டும்" என கி.பி 1187இல் நிசங்கமல்லன் அரசாணை பிறப்பித்தான்.
இந்த வரலாற்றுப் போக்கின் தொடர் விளைவுகளில் பௌத்த மகாசங்கமும் அதன் தலைமைப் பிக்குகளான மகாநாயக்க தேரரர்களும் இலங்கைத் தீவின் அரசியலை, அதன் செல்நெறியை வழிநடத்திச் செல்லும் சுக்கான்களாக தொடர்ந்து செயல்படுகின்றனர்.
அது இலங்கை தீவு ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களினால் கைப்பற்றப்பட்ட போதும் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்குழாம் வரை பௌத்த மாகாசங்கத்தின் செல்வாக்கே ஓங்கி இருந்திருக்கின்றது.
அதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே இலங்கை தீவனுடைய ஆட்சி அதிகாரம், சிங்கள ஆளும் குழாத்தின் ஏற்பாடுகளும் அமைந்திருந்தன. அதன் தொடர்ச்சியே இன்று வரை நிலைபெறுகிறது.
இந்திய இராஜதந்திரம்
இலங்கை தீவின் புவியியல் அமைவிடம் இந்திய துணைக்கண்டத்துக்கு நெருக்கமாக அமைந்திருப்பதனால் அது இந்தியாவின் அரசியல், பொருளியல், இராணுவ மற்றும் பண்பாட்டியல் செல்வாக்கு எப்போதும் உட்படும்.
ஆனால் அது இந்துசமுத்திரத்தின் மைய ஸ்தானத்தில் அமைந்திருப்பதனால் சர்வதேச கவனத்தை ஈர்ந்திருப்பதும் அதன் காரணமாக உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் ஆதரவை பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதனாலும் இந்திய செல்வாக்கை அல்லது இந்தியாவின் மேலாண்மையை தனது தேவைக்கேற்றவாறு தடுத்து நிறுத்தும் பலத்தையும், வல்லமையையும், வாய்ப்பையும் கொண்டுள்ளது.
அத்தோடு இந்திய இராஜதந்திரத்தை விஞ்சிய, வெல்லக்கூடிய நீண்ட தொழில்சார் வளர்ச்சிபெற்ற இராஜதந்திர கட்டமைப்பை இலங்கை அரசு கொண்டிருப்பதனால் இந்திய பேரரசு இலங்கை தீவின் மீது மேற்கொள்ளக்கூடிய எத்தகைய மேலாண்மை மூலோபாயத்தையும் முறியடித்து எப்போதும், எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய சுயாதீனமான பலமான அரசியல் அடித்தளத்தை சிங்கள பௌத்த அரசியல் கொண்டுள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தினது அருகாமை, சர்வதேச வர்த்தக மற்றும் இராணுவ, போக்குவரத்து மையஸ்தானமாகவும் இருப்பதனால் சர்வதேச அரசியல், பொருளியல், இராணுவ மேலாண்மை போட்டிகளுக்குள் தன்னையும் இணைத்து, உலகம் தழுவிய மேலாதிக்க சக்திகளுடன் தனக்கு ஏற்றவகையில் ஒட்டி உறவாடி பின்னிப்பிணைத்தவாறு இலங்கையின் அரசியல் அதிகார மையம் வடிவம் பெற்றுள்ளது.
2000 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவின் மீது தென்னிந்திய பேரரசுகளின் படையெடுப்புக்களின்போது அதற்கு அனுசரணையாக ஈழத் தமிழர்கள் இருந்தார்கள் என்பதும், வடஇலங்கைத் தமிழ் மன்னர்கள் ஒருபோதும் தென்னிந்திய பேரரசர்களுடன் போராடாமல் அவர்களுடன் இணங்கி வாழ்ந்தார்கள் என்பதும், ஈழத் தமிழர்கள் எப்போதும் தென்னிந்திய பேரரச விஸ்தரிப்புக்கு ஆதரவளித்தார்கள் என்பதும் எனவே இந்திய விஸ்தரிப்புகளின் கருவிகளாக ஈழத் தமிழர்கள் இத்தீவில் உள்ளார்கள் என்ற தீராத பகை மனவுணர்வு நிலையிலுமே பௌத்த மாசங்கம் கட்டமைக்கப்பட்ட பெரு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
சாதி, மதம், அரசியல் ஆதிக்கம் என்ற மூன்றையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து மூன்றையும் ஒன்றிணைத்து வைத்திருக்கின்ற பலமான முதுகெலும்பாக பௌத்த மாசங்கம் திகழ்கிறது. இந்த பௌத்த மகாசங்கங்களின் வளர்ச்சிக்கு மேலாக இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால் இலங்கை இராணுவம் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வளர்ந்து இருக்கிறது.
ஆயினும் இந்தப் பிரமாண்டமான இராணுவ சக்தியும் பௌத்த மகா சங்கத்துக்கு பணிவானதாகவும், கட்டுப்பட்டதாகவும், சங்கத்தின் மேலாணையை ஏற்பதாகவும் அமைந்திருக்கிறது.
தமிழ் மக்கள்
இந்த அடிப்படையில் இலங்கை தீவில் ஏற்படுகின்ற எந்த ஒரு பிரச்சினையும் தமிழர்களை மையப்படுத்தியே பயணிக்கின்றது.
ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் ஒரு சிறிய தேசிய இனமாக இருக்கலாம். ஆனால் இலங்கை தீவின் அனைத்து செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல சக்தியாக ஈழத் தமிழர்கள் தொடர்ந்து நிலைத்திருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை தீவின் அரசியல் அதிகார சக்தியை தீர்மாணிக்கும் வல்லமை தமிழ் மக்களுக்கு உண்டு. கடந்த 75 ஆண்டு கால இலங்கைத் தீவின் ஜனநாயக ஆட்சி அதிகார மையத்தை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களிடம் இருந்துள்ளது.
அந்த அடிப்படையில் இன்றைய இலங்கைத் தீவின் அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்களுடைய பங்கும், பாத்திரமும் பெரிது. எனினும், அந்தப் பங்கையும் பாத்திரத்தையும் தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக இன்று வரை பயன்படுத்தவில்லை.
ஆனால் இப்போது தமிழ் மக்களுடைய இறைமையையும், இத்தீவில் தங்களுக்கு உள்ள பங்கையும், பாத்திரத்தையும் வெளிக்காட்டவும், நிலை நாட்டவும் உரிய காலச் சூழ்நிலை ஒன்று கனிந்திருக்கிறது. அதனை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
எதிரிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதும் அந்த நெருக்கடிகளுக்குள் நிர்பந்தங்களை ஏற்படுத்தி தமக்கான தேவைகளை நிறைவேற்றுவதுதான் அரசியல் இராஜதந்திர பொறி முறை எனப்படுகிறது.
தாம் விரும்பிய ஒன்றை எதிரியைக் கொண்டு செய்ய வைப்பதுவே அரசியல் ஆளுமை அல்லது இராஜதந்திர வித்தை எனப்படுகிறது. இப்போது ஈழத் தமிழர்களுக்கு சிங்கள தேசத்தை தம்மை நோக்கி இழுக்கும் வாய்ப்பு ஜனாதிபதி தேர்தல் என்ற வடிவில் தோன்றியிருக்கிறது.
இதனை மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யார் பக்கம் நின்றால் என்ன, யாரை எதிர்த்தால் என்ன. வாக்களிக்காமல் பகிஸ்தரித்தால் என்ன. சிங்கள தேசத்தின் தலைமைகளுக்கு ஆதரவளிப்பதாகவே அமையும். ஆனால் சிங்கள தலைமைகளால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை.
கருத்துக் கணிப்பு
தமிழ் மக்கள் சிங்கள தேசத்தின் தலைமைக்கான தேர்தலை தமிழ் தேசியத்திற்கான தேர்தலாக மாற்றி பயன்படுத்த முடியும். தமிழ் தேசிய ஆணையைப் பெறுவதற்கான தேர்தலாக மாற்றி பயன்படுத்த முடியும்.
தமிழ் தேசிய எழுச்சிக்கான தேர்தலாக இதனை மாற்றி பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்துவதற்கு இலங்கை தேர்தல் சட்ட விதிகளின் ஓட்டைகளை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
இன்று சிங்கள தேசத்தில் தலைமைத்துவ அதிகார போட்டி பலமடைந்திருக்கிறது. மிகச் சிக்கலான சாதி பேத அரசியலும், கோட்பாட்டு அரசியலும், பண்பாட்டு அரசியலும் மோதும் களமாக சிங்கள தேசம் மாறி இருக்கிறது.
சிங்கள தேசத்தின் போட்டி களத்தினை முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை தம்மை மேல் எழுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தும் களமாக இதனை மாற்ற வேண்டும். இந்தத் தேர்தலின் மூலம் தமிழ் தேசியத்தை மீண்டும் கட்டமைப்புச் செய்திட முடியும்.வலுப்படுத்திட முடியும்.
அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்த ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களுக்கு வழங்கி இருக்கிறது என்று சொல்வதே பொருத்தமானது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு சர்வதேச மேற்பார்வையில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தும் படி தமிழ் மக்கள் சர்வதேசத்திடம் கோருகின்றனர்.
ஆனால் இலங்கையின் அரசியல் சட்ட வரம்புக்குள் அவ்வாறு ஒரு கருத்துக் கணிப்பு வாக்கடுப்பை நடத்த முடியாது. அதனை இலங்கை அரசு ஏற்கவும் மாட்டாது.அனுமதிக்கவும் போவதில்லை.
ஆனால் அவ்வாறான தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பை வாக்குகளாக திரட்டி காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு தமிழ் மக்களை வாக்களிக்க செய்வதன் மூலம் தமிழ் மக்களின் ஆணையை பெற முடியும்.
தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளையும் தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்து அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ் மக்களை வாக்களிக்கும் படி கோர முடியும். அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் ஆணையை பெற முடியும்.
தமிழ்த் தேசிய எழுச்சி
அது சர்வதேச கவனத்தையும் பெறும். இந்த ஆணை வலுவுள்ளதாகவும் அமையும். அதனை அடித்தளமாகக் கொண்டு பன்னாட்டு அரசியலில் தமிழ் மக்கள் தமக்கான தேசிய அபிலாசைகளை அடைவதற்கான அரசியல் செயல் திட்டத்தை முன்னெடுக்கவும் முடியும்.
ஈழத் தமிழர்கள் தமது இறைமையை வெளிப்படுத்துவதற்கும், நிரூபிப்பதற்கும் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது மிக அவசியம். அவ்வாறு நிறுத்தினால் தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை மிக விரைவாக கட்டுமானம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனமாக
1)வட்டுக்கோட்டை தீர்மானத்தின் சாராம்சத்தை வைக்கலாம்.
2) திம்பம் கோட்பாட்டை முன்வைக்கலாம்.
3) ஓஸ்லோ பிரகடனத்தை முன்வைக்கலாம்.
அல்லது இவற்றில் உள்ளவற்றில் தற்போதைய நடைமுறைக்கும், அரசியல் சூழமைக்கும் பொருத்தமான சாதகமானவற்றை ஒருங்கிணைத்து ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து தமிழ்த் தேசியத்தின் சார்பில் தேர்தலில் பங்கு பெற்றுதல் அவசியமானது.
இத்தகைய ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்கும் பட்சத்தில் அனைத்து தமிழ் மக்களும் இங்கே ஒன்றுபட்டு நிச்சயம் வாக்களிப்பர்.
அத்தோடு கட்சி பேத, குரோதங்களினால் இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் தமிழ் தலைமைகளை தமிழ் மக்கள் தூக்கி எறிவர் என்பதும் நிச்சயம். இந்தத் தேர்தல் காலத்தில் தேர்தல் நடைமுறைகளுக்குள் தமிழ் மக்களின் பொது வேட்பாளரின் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவதற்கும், மக்கள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க முடியாது.
இந்தத் தேர்தல் காலத்தை தமிழ்த் தேசிய எழுச்சிக்கான அனைத்து கட்டுமானங்களையும் கட்டமைப்பு செய்வதற்கான ஒரு கால அவகாசமும் வாய்ப்பும் உண்டு. அதுமட்டுமல்ல பல்தரப்பட்ட கட்சிகளாகவும் பிரதேசங்களாகவும் சாதி மத ரீதியிலும் பிளவுபட்டு கிடக்கின்ற தமிழ் தேசிய இனத்தை ஒன்றுபடுத்தி தமிழ் தேசியத்தை மீள்கட்டுமானம் செய்யவும் இந்தத் தேர்தலையும் தேர்தல் பிரச்சாரத்தையும் பயன்படுத்த முடியும்.
தமிழ் மக்களை ஒரு புள்ளியில் இணைப்பதன் மூலம் கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகளை களையவும் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியமான வழிவகைகளும் இக்காலத்தில் தோன்றும்.
இத்தகைய ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்கின்ற போது போலித் தமிழ் தேசியவாதிகளும், சுயநல அரசியல்வாதிகளும் இந்த இடத்தில் ஒற்றுமைப்படுவர் அல்லது ஆதரவை ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும்.
ஆகவே முதலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துங்கள் அதன் பின் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய அனைத்தும் நிகழும் என வரலாறு கட்டளையிடுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 03 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.