தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமையாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். சிவில் அமைப்புக்களுடனும், தமிழரசுக் கட்சியுடனும் இது தொடர்பில் பேசுவோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கட்சியுடனும் பேசுவதற்கு முயற்சிப்போம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று (07.01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நில அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நாம் அவருடன் பேசியிருந்தோம். இன்னும் பல விடயங்களை பேசியிருந்தோம். நாம் கூறும் விடயங்கள் உடனடியாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை.
நாங்கள் கேட்ட விடயங்களிற்கான சரியான பதிலை அவர் தரவில்லை. சம்பிர்தாய பூர்வமான ஒரு கூட்டமாகவே இது இடம்பெற்றது. பல அபிவிருத்திகள் அறிவிக்கப்பட்டாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதி வந்துசென்ற பின்னர் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இராணுவமுகாம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அது என்ன தேவைக்காக அமைக்கப்பட்டது என்ற விடயம் தெரியவில்லை. எமது மக்களை அச்சுறுத்துவதற்கான செயற்பாடே அது.
ஏற்கனவே பொலிஸ் சோதனைசாவடி அங்கு இருக்கின்றது. இந்நிலையில் இராணுவத்தின் தேவை என்ன என்று புரியவில்லை. இது தொடர்பாக நாம் நாடாளுமன்றிலும் ஜனாதிபதியிடமும் பேசுவோம். இது அகற்றப்பட வேண்டிய முகாம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
சிவில் நிர்வாகம் என்பது பொலிசாரிடம் தான் ஒப்படைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் வருகையின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது ஆதங்கத்தை போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்திய போது கைதுகள் இடம்பெற்றிருந்தது. இது கண்டிக்க வேண்டிய விடயம்.
தமது உறவுகளை தேடி பல வருடமாக போராடி வரும் ஒருவரை
ஜனாதிபதிக்கு எதிரான போராட்டமாக பார்க்காது அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்
என்பது எங்களது கோரிக்கை.
இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதி தேர்தலா அல்லது நாடாளுமன்ற தேர்தலா என பேசப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பல ஊகங்கள் பேசப்படுகின்றது. வட-கிழக்கில் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத சூழலில் இந்த தேர்தலை கையாளும் விதம் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.
அனைத்து கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக நாம் பரிசீலிக்கவேண்டும்.
எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டுமானால் இந்த முயற்சியே பலனளிக்கும் என்று நான் நினைக்கின்றேன். அந்த ஒற்றுமை சாத்தியமா என்ற கேள்வி இருக்கிறது.
இதில் பல கட்சிகள் தங்களது கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அது போல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற தனது கருத்தை சொல்லியிருக்கிறார். தமிழரசுக் கட்சி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
இருந்தாலும் இடைமட்ட தலைவர்கள் பொதுவான கருத்துக்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
போராட்டங்கள் தடுக்கப்படும் நிலை
தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிவில் அமைப்புக்களுடனும், தேசிய கட்சிகளுடனும் பேசி ஒரு ஒற்றுமையான முடிவிற்கு வருவது சாலச் சிறந்ததாக இருக்கும். இந்த ஒற்றுமை சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், சிவில் அமைப்புக்கள், தமிழரசுக் கட்சி என்பவற்றுடன் பேச வேண்டியுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கட்சியுடனும் பேசுவதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வோம்.
அந்தவகையில் முழுமையாக எடுக்கும் முடிவே சாத்தியமாகும். தென் இலங்கை வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒரு நிபந்தனைக்குட்படுத்த வேண்டும். அத்துடன், அரசால் கொண்டு வரப்படவுள்ள புதியபயங்கரவாத தடைச்சட்டம் மோசமானதாகவே உள்ளது. அதன்மூலம் ஜனநாயக போராட்டங்கள் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பமும் உள்ளது. இதற்கு நாம் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பைக் காட்டுவோம்.
மாவீரர் தின நிகழ்வுகளில் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் எப்படி பாய்ந்தது என்று நாம் பார்த்தோம். போராட்டங்களை முன்னெடுக்கும் போதும் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தசட்டம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே ஐ.நாசபையின் நிலைப்பாடாக உள்ளது.
எனினும் இலங்கை அரசாங்கம் அதனை ஏமாற்றி வருகின்றது. ஐ.நா மீதும் எமது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.
ஐ.நா தீர்மானங்கள் காட்டமாக இருந்தாலும் அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
சர்வதேச மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பது எமத மக்களின் கோரிக்கையாகவுள்ளது. எனவே புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தையும் எம்மால் ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
