மெல்லச் சாகும் தமிழ்த் தேசியம்
உண்மையிலே தமிழ் தேசியமா? தேசியத் தமிழா? என்ற தத்துவக் குழப்பத்திற்குள் இன்றைய வடக்கு கிழக்கு தமிழ் மக்களது அரசியல் அரங்கு அமைந்து வருகின்றது என்பது மிகவும் வருத்தத்திற்குரியதொரு விடயப்பொருளாகின்றது.
அண்மைய நாட்களில் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கம், அது தொடர்பான பங்கீடு என்பனதொடர்பான விடயங்களை தாங்கிவரும் செய்திகள் கனதியானதொரு விடயத்தினை எம் காதுகளில் போட்டுச்செல்கின்றன என்பதை யாரும் மறுத்திட முடியாது.
தமிழ்த் தேசிய கட்சியாக அரசியல் நிலைப்பாட்டினை மக்கள் முன் வாக்கிற்காக விளாசித்தள்ளும் கட்சிகள் தேசிய தமிழ்க் கட்சிகளாக நிதி ஒதுக்க விடயங்களில் செயற்படுவது ஏற்புடைய விடயம் அல்ல என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
காலணித்துவ ஆட்சி
காலணித்துவ ஆட்சி, தமிழ் சிங்கள தலைமைகளது ஆட்சி, சிங்கள தமிழ் தலைமைகளின் ஆட்சி, ஆயுதப் போராட்டம், சிங்கள தலைமைகளின் ஆட்சி என்ற தொடர்ச்சியிலேயே வடக்கு கிழக்கு இலங்கைத் தமிழர்களது அரசியல் போக்கு காணப்படுகின்றது.
காலணித்துவ ஆட்சியிலேயும், தமிழ் சிங்கள தலைமைகளது ஆட்சியிலேயும் ஆட்சியாளர்களில் செல்வாக்கு செலுத்துதல் என்பதில் தமிழ் மக்களது பங்கேற்பானது மிக உச்சமாக காணப்பட்டது. பல தீர்மானம் மிக்க தலைமைகள் அன்றைய காலச்சூழலில் தமிழ் இன அடையாளமாக உலகம் அறியும் வகையில் வாழ்ந்திருக்கின்றார்கள்.
பின்நாட்களில் அரசியல் ஊடாக அடைய முடியாது என்ற முடிவில் அண்ணளவாக மூன்று தசாப்த கால யுத்தம் தமிழ் மக்களுக்கு வழங்கிய இழப்புக்களில் மிக முக்கியமான இழப்பாக கருதப்படவேண்டியது தமிழ் மக்களது பிரச்சினையை தெளிவாக முன்கொண்டு செல்வதற்கு உரிய தமிழ்த் தலைமைகளை இழந்ததுதான் என்றால் அது மிகையாகாது.
மறு வடிவில் குறிப்பிடுவதென்றால் தமிழ் மக்களது பிரச்சினைகளை தெளிவாக முன்கொரணக் கூடிய புலமைத்தமிழர்களை இந்த யுத்தம் அழித்திருக்கின்றது அல்லது இந்த அரங்கில் இருந்து அகற்றியிருக்கின்றது. அதனைப் பெருந்தேசியம் மிகச் சிறப்பாக மேற்கொண்டிருக்கின்றது என்பது நிர்சனமான நிறுவலாகின்றது.
குறிப்பாக சொல்வதானால் 2009 க்கு முன்னர் காணப்பட்ட தமிழர்களது பிரச்சினைகள் என அடையாளப்படுத்தப்பட்டவைகள் அனைத்தும் 2009 க்கு பின்னராக தமிழர்களது பிரச்சினைகளாக தற்போது பொது வெளிகளில் காணமுடியவில்லை.
2009க்கு பின்னரான பிரச்சினை
மாறாக, 2009க்கு பின்னரான பிரச்சினைகள் அனைத்துமே தமிழ் மக்களது பிரச்சினைகளாக அடையாளப்படுத்தப்பட்டு, அர்த்தப்படுத்தப்பட்டு இன்றைய சந்தைப்படுத்தல் நிபுணத்துவ உலகில் சுற்றமொல்லாம் சுற்றித்திரிகின்றது.
2009க்கு முன்னாரன மூன்று தசாப்த காலங்கள் மற்றும் ஆயத வழித் தீர்வுதான் என்ற முடிவு என தீர்மானிப்பதற்கு முன்னர் இருந்த தமிழ் மக்கள் மீதான அழுத்தங்கள், பிரச்சினைகள் என்பவைகள் எவையும் இன்றைய நவீன தமிழ்த் தேசிய வாதிகளால் முன்வைக்கப்படுவதில்லை, மாறாக இன்றையகாலத்தில் உள்ள பிரச்சினைகள் மாத்திரமே முற்படுத்தப்படுகின்றன.
இவற்றிற்குரிய தீர்வானது எவ்வகையிலும் அடிப்படைப் பிரச்சினைக்குரிய தீர்வாக மாட்டது. இவ் வாதத்தினை உறுதிப்படுத்துவதற்கு 2009 களுக்கு பிற்பாடு இன்றுவரை வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகட்டும் அல்லது அதற்குள் அடங்கியிருந்த இன்று வெளியில் இருக்கின்ற கட்சிகள் ஆகட்டும் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் தொடர் இலக்கங்கள் அல்லது புள்ளடி நட்சத்திர இடுகைகளில் ஒமுங்குகள் மற்றும் சொற்பதங்கள் மாத்திரம் மாறியிருக்கின்றனவே தவிர தமிழர்களுடைய பிரச்சினையின் அடிநாதங்கள் அவற்றுக்கான தீர்வுவழிமுறைகள் எவையும் அறியப்படவுமில்லை, ஆராயப்படவுமில்லை.
ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் கோலோஞ்சியிருந்த காலத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பில் விடுதலைப் புலிகளது அரசியல் ஏற்பு நிலைப்பாடானது ஆரம்பிக்கின்றது.
மாறாக இது ஒரு நலிவுற்ற நிலையில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஒரு ஆயுதப் போராட்ட குழுவை ஒரு தரப்பாக கருதி ஒரு இனத்தின் நிலைப்பாடுகள், கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தீர்வுகளை எட்டுவதற்கு தனித் தரப்பாக விடுதலைப் புலிகள் தங்களை சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு அண்ணளவாக ஆயுதம் தூக்கி இரண்டு தசாப்தகாலங்கள் பயணிக்கவேண்டியிருந்தது.
தமிழ் தேசிய கட்சிகள்
அதன் பின்னரும் அரசியலின் ஊடாகவே அரசியலமைப்பினை திருத்த முடியும் என்பதையும் அவர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.
இத் தமிழ் தேசிய கட்சிகளினது அல்லது கூட்டுருவாக்கங்களது அங்குராற்பணங்களைத் தாண்டி அவர்களது பெருத்திட்ட நிகழ்ச்சி நிரலை விடுதலைப் புலிகள் வழங்கியிருக்கவில்லை, அல்லது வழிப்படுத்தியிருக்கவில்லை என்பது யதார்த்தம்.
இலங்கைத் தமிழர் அரசியல் தளத்தில் விடுதலைப் புலிகள் அகற்றப்படலாம் என்ற நிலைப்பாட்டினை விடுதலைப் புலிகள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆதலால் அங்குராற்பணம் செய்யப்பட்டவர்களுக்கு இனத்தின் நிகழ்ச்சி நிரல் கிடைக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவானவர்களுக்கு தாங்கள் தான் தமிழர் பிரச்சினைகளை முற்கொண்டு செல்லவேண்டியவர்கள் ஆவோம் என்ற எதிர்பார்ப்பும் அதற்குரிய தகமையும் அவர்களிடம் கிஞ்சித்தும் இருந்திருக்கவில்லை.
விடுதலைப் புலிகளது அரங்க அகற்றலுக்கு பிற்பாடு விரும்பியோ விருப்பமற்றோ அந்த வேடத்தினை தரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உருவாகின்றது.
ஒற்றுமை என்ற கோட்பாடு ஆனது தத்துவத்திலும் சரி அரசியலிலும் சரி வெவ்வேறுபட்ட குணாம்சங்கள் பண்புகள் உடையவகைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக மாத்திரம் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டு விகிதாசாரங்களைக் குறைத்து அல்லது ஒழித்து ஒவ்வொன்றுக்கும் இடையே இயன்றளவு நெகிழ்சியுடன் ஒருங்கிணைந்து பயணிப்பது எனப் பொருள்கொள்ளப்படுகின்றது.
இங்கே நெகிழ்ச்சியுடன் பயணிக்க வேண்டிய ஏதோ ஒரு காரணம் இவர்களிடத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. இதனை இனி இவர்களால் வரையறுக்கவும் முடியாது, காரணம் இலக்கினை வரையறுக்கும் அறிவு அல்லது திறன் இவர்களிடம் இருக்கலாம், ஆனால் இது தான் இனத்தின் இறுதி இலக்கு என்பதை உரத்து கூறும் ஒற்றுமை இவர்கள் யாரிடமும் இப்போது இல்லை.
அவ்வாறு இவர்யாரேனும் கூறினாலும் இவர்களில் இருந்து பிரிந்த அல்லது பிறிதொரு தமிழ்த் தரப்பு அதனை நிராகரித்து கருத்துருவாக்க முடியும். அதனை காரணம் காண்பிந்து பெருந்தேசியவாதம் தன்னைத் தக்கவைத்து கொள்ளும் தகவமைத்துக் கொள்ளும்.
தமிழ் மக்களது ஒற்றுமை
இவ்வாறானதொரு குழப்பமான சூழலில் தமிழ் மக்களது ஒற்றுமையை வெளிப்படுத்துதல் என்ற பொதுவேட்பாளர் பொய்மான் ஒன்று தோற்றம் பெற்றிருக்கின்றது.
இது தமிழர் தரப்பு நிலைப்பாட்டினை தேர்தலில் வெளிப்படுத்தும் என சித்தாந்த ரீதியான எதிர்பார்க்கைகளுடன் முன்வைக்கப்பட்ட விடயமாகின்றது. இச் சித்தாந்த பரிசோதனை வெற்றிபெறும் பட்சத்தில் அதாவது தமிழ் வாக்காளர்களில் பெரும்பான்மை வாக்காளர்கள் வாக்களிக்கும் போது அதனை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம்.
அதனை தமிழ் தரப்பு வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவ்விளைவின் ஊடாக ஒரு செய்தியைச் சொல்ல முனையலாம். ஆனால் மறுவளமாக தோல்வி அதாவது தமிழர் தரப்பு வாக்குக்களின் எண்ணிக்கைத் தோல்வியின் ஊடாக இங்கே விளையும் விளைவுகள் யாது என நேர்மையாக கேட்கும்போது தமிழர் தரப்புக்கும் அரசியல் இருப்பிற்கும் நன்மை பயக்கக் கூடிய எந்தப் பதிலும் கிடைக்கப்போவதில்லை.
இச் செயன் முறையை முன்னெடுத்து செல்லும் வகுதியினைரைப் பார்க்கையில் ஒரு தேர்தல் மாவட்டத்தில் அதிக பட்சம் ஒரு தேர்தல் வெற்றி ஆசனம் அல்லது தேசியப்பட்டியல் வெற்றி ஆசனத்துடன் கூடிய அல்லது அவை எவையும் அற்ற அரசியல் கட்சிகளும் நேரடி அரசியல் வியாபாரத்தில் ஈடுபடாத பொதுத் தளப் பிரதிநிதிகளும் இணைந்து இருக்கின்றார்கள்.
குறைந்த பட்சம் தனிநபர் செல்வாக்கு மிக்க தேர்தலை வெல்லத் தவறியவர்களும் அவர்களுடன் கருத்தொருமித்த பொதுத் தள பிரதிநிதிகளது கருத்துக்களையும் எவ்வளவு தூரம் வாக்காளர் ஏற்பார்கள் என்பது கடந்த தேர்தல்களின் முடிவுகள் கங்கணம் கட்டி நிற்கின்றன.
இவ்வாறானதொரு தோல்விச் சூழ்நிலையில் நிறுத்தப்படும் சித்தாந்த பொதுவேட்பாளர் கோட்பாடு எவ்வகையில் வெற்றிச் செய்தியை வெளியே சொல்லும் என்பது நியாயப்படுத்த முடியாத ஒரு கணிப்பீடாக இருக்கின்றது.
மாறாக அரசியல் களத்தில் தங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், புதுமுக அரசியல் புள்ளிகளை உருவாக்குவதற்காகவும் முன்னிலைப்படுத்தப்படும் ஒரு சித்தாந்த கோட்பாடுதான் பொது வேட்பாளர் எனவும் கருதலாம்.
மாறாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு பிரமுகரின் இரண்டாம் பினாமி அணி தான் என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கின்றது காரணம், இம் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமாயின் அதன் அழுத்தம் அத்தனை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இருக்கும், மற்றும் ஒரு ஜனரஞ்சகமான நபருடன் அல்லது குழுவுடன் மாத்திரமே இரண்டாம் பினாமி அணி சதிகளைப் பின்ன முடியும், நேர்மையாக ஒருமைப்பாட்டுடன் நன்மை பயக்கும் விடயத்தில் ஒத்துழைக்காதவர்கள் ஒருபோதும் ஒரு இரண்டாம் பினாமி அணிக்காக ஒத்துழைக்க மாட்டார்கள்.
பொதுநோக்க சிந்தனை
காரணம், நேர்மையான விடயமாயின் வெற்றி கிடைக்கும்போது அங்கே கிடைக்கும் அனுகூலங்கள் நெகிழ்ச்சியுடனும் இதயசுத்தியுடனும் பங்காளர்களால் பொதுநோக்க சிந்தனையில் அணுகப்படும். மாறாக பினாமி அணிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களையும் கையூட்டுக்களையும் நேர்மையாக பகிர்ந்து கொள்ளும் ஒரு அரசியல் கலாச்சாரம் மேற்குறித்த குழுவினரிடமோ ஏன் ஒரு படி மேலே சென்றால் தமிழ் சமூகமாகிய எங்களிடமோ என்றைக்கும் இருந்ததும் இல்லை, இருக்கவும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை.
2009க்கு பின்னரான நாடாளுமன்ற வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதித்துவமானது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டு கட்சிகளின் அங்கத்துவ எண்ணிக்கைகளை காட்டிலும் தேசிய தமிழ் கட்சிகள் மற்றும் ஒத்துழைப்பவர்கள் என்ற நிலைப்பாடுடைய கட்சிகளின் எண்ணிக்கையில் வளர்ந்து வருகின்றது என்ற கசப்பான உண்மையை தமிழ்த் தேசிய வாதிகள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
உணர்வு, சந்தர்ப்பம் சூழல் என்பவற்றைக் கடந்து நடைமுறைச் சாத்தியம், உடனடி நிவாரணம், தனிப்பட்ட நலன்களுக்கான முன்னலைவாய்ப்பு என்பவற்றை கருத்தில் கொள்ளும் சமூக மாற்றத்திற்கு எமது அரசியல் மாறிவருகின்றது என்பதை மறுத்துவிட முடியாது. கடந்த தேர்தல்களில் விளையும் பெறுபேறுகள் இந் நிலைப்பாட்டிற்கு வலுச் சேரக்கின்றன.
தமிழ் தேசியம் உயிருடன் இருக்க வேண்டுமாயின் அதன் முதலாவது கோட்பாடானது அதனை வலியுறுத்தும் அத்தனை தமிழ்த் தரப்புக்களும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். இதற்கு பின்னரே ஏனைய அம்சங்களைக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
மாறாக வடக்கு கிழக்கு தமிழர் தரப்பு அரசியல் மீள எக்காலத்திலும் எக்காரணத்திற்காகவும் தெளிவாக நோக்கத்திற்காக இதயசுத்தியுடன் இணைந்து பயணிக்கப் போவதில்லை என்பது மிக மிக தெளிவான விடயம்.
சாத்தியம் குறைந்த விடயம்
இன்னும் சில ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் இருந்து ஒரு தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் குறைந்தது ஒரு ஆசனத்தினையேனும் பற்றிக்கொள்வது என்பது சாத்தியம் குறைந்த விடயமாக நகர்கின்றதை நாங்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.
மாறிவரும் உலக ஒழுங்கில் நிலைப்பாடு, கொள்கை என்பன சித்தாந்த ரீதியில் கனதியான கருத்தியல்களாக கோட்பாடுகள் ரீதியல் பாவனைக்குட்படுத்தப்பட்டுக்கொண்டு இருந்தாலும் அனைத்தையும் தீர்மானிப்பது பணம் மாத்திரமே என்பது மீள மீள உறுதிப்படுத்தப்படுகின்றது.
அண்மைய செய்திகளும் சொல்லும் தெளிவுபடுத்தல் யாதெனில் பொருள் நிலை வாத்தில் தான் இந்த உலகம் சுழன்றுகொண்டு இருக்கின்றது. தேசியத்தினை நிலைநிறுத்த முதலில் தமிழ் மக்களுக்கு அவசியமானது பொருளாதார போசாக்கு நிலை அவசியமானது.
அதனை நோக்கியதாகவே தமிழ் சமூகம் செயற்படவேண்டும். இலங்கையின் பல பொருளாதாரங்கள் தமிழர்களைத் தங்கியே இருக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மாத்திரமே நாட்டின் அரசியலில் கணிசமான சாதகமான தாக்கத்தினை செலுத்தமுடியும். இங்கே மாறாக தமிழ்ச் சமூகத்திடம் சேர்ந்து வெற்றிகொள்ளுதல் என்ற பண்பு கற்பனைக் கருத்தியலாகவே இருக்கின்றது, வளர்கின்றது.
இந்த சூழலில் பொது வேட்பாளர் அல்ல அதனையும் தாண்டியதொரு சிறப்பான விடயம் முன்னெடுக்கப்பட்டாலும் அது உண்மையில் ஒரு வலுப்பெற்றதாக எக்காலத்திலும் வரமுடியாதது.
தனிப்பட்ட சுயலாப அரசியல் அனுகூலங்களை நோக்கியதாக தறிகெட்டு தமிழின பிரதிநிதிகள் பயணிக்க ஆரம்பித்து வந்துவிட்டார்கள் என்பதை நாடாளுமன்ற பிரதிநிதித்துவ தமிழர்களை பட்டியலிடும்போது மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. இனி மெல்லச் சாகும் தமிழ்த் தேசியம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 06 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.