நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos)
இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ள நிலையில் குறித்த உலர் உணவுப் பொருட்கள் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
ஹட்டன்
இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருள்கள் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட புகையிரதம் மூலம் இன்று காலை ஹட்டனை வந்தடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் - அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தமிழக நிவாரணப் பொருட்கள் கொழும்பிலிருந்து புகையிரதத்தில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

கிராமசேவகர் பிரிவுகளினுடாக நிவாரணம்
இந்நிலையில் நுவரெலியா - அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 67 கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 23350 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்கள் லொறிகளில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாறு கிராம சேவகர்களின் ஊடாக கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள் எதிர்வரும் நாட்களில் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - திருமால்



வவுனியா
பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 22,550 அரிசி பொதிகளும், 750 பால்மா பொதிகளும் இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது.
விசேட புகையிரதம் மூலம் வவுனியாவை வந்தடைந்த நிவாரணப் பொதிகள் வவுனியா புகையிரத நிலைய அத்தியட்சகரால் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசாங்கத்தின் உதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை மக்களுக்காகத் தமிழக அரசினால் அரிசி, பால்மா உள்ளடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதில் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கு 22,550 அரிசி மற்றும் 750 பால்மா பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கான நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்த நிலையில் அதனை மாவட்ட செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று பிரதேச செயலாளர்களிடம் கையளித்தனர்.
அந்தவகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்கு 12,315 அரிசி, 452 பால்மா பொதிகளும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு 4675 அரிசி மற்றும் 148 பால்மா பொதிகளும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு 3560 அரிசி, 116 பால்மா பொதிகளும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு 2000 அரிசி, 34 பால்மா பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அவை கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

செய்தி - திலீபன்
அம்பகமுவ
அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 67 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 22 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இந்திய தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று முதல் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தாரா கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த உணர்வு பொருட்கள் இன்று இரண்டாம் திகதி ஹட்டன் புகையிரத நிலையத்தில் கொண்டுவந்த இறக்கியதும் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
இந்திய நிவாரண பொருட்களை முதற்கட்டமாக இன்றைய தினம் அரிசி விநியோகிக்கப்பட்டது. முதற்கட்ட உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு இந்த அரசி ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ கிராம் வீதம் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வறுமையான குடும்பங்களுக்கும் பெற்றுக்கொடுக்க உள்ளத்துடன், இதில் 35 தோட்டப்புறங்களைச் சேர்ந்த கிராமசேவகர் பிரிவுகளிலும் 22 வறிய குடும்பங்கள் உள்ள கிராம சேவகர் பிரிவிலும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இந்த நிவாரண பொருட்கள் பெற்றுக் கொடுப்பதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கவில்லை. இதனை மிகவும் நியாயமான முறையில் உரிய குடும்பங்களுக்குப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தடுத்து வரும் நிவாரண பொருட்களைத் தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிவாரண பொருட்கள் சீல் வைக்கப்பட்ட புகையிரதப் பெட்டி ஒன்றில் கொண்டுவரப்பட்டு பிரதேச செயலாளரினால் சீல் உடைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.